8 ஆண்டுகளுக்கு பிறகுசேஷசமுத்திரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்கலெக்டர் ஷ்ரவன்குமார், உதயசூரியன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

சேஷசமுத்திரம் ஊராட்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் ஷ்ரவன்குமார், உதயசூரியன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

Update: 2023-08-15 18:45 GMT

சங்கராபுரம், 

கிராம சபை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசியதாவது:-

முழு ஒத்துழைப்பு

இக்கிராமத்தில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சி னைகளால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த முடியாத நிலை இருந்தது. கடந்த 8 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கிராம சபை கூட்டத்தை சுதந்திர தினத்தன்று நடத்திட முடிவு செய்தேன். மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டங்களாக அமைதி குழு பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.

மேலும் இங்கு அனைத்து நிகழ்ச்சிகள், வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள அனைத்து சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் இக்கிராமம் வளர்ச்சி அடையும். இதுதவிர இக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காகவும், பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் நிரந்தரமாக 144 தடை உத்தரவை நீக்கிட அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இன்றையதினம் பொது மக்கள் அனைவரும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளதை பார்க்கும்போது தங்களுக்கும் தங்களது கிராமத்திற்கும் இன்று தான் முழு சுதந்திரம் கிடைத்தது போல் உள்ளது.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

உறுதிமொழி

அதைத்தொடர்ந்து சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையிலும், உதயசூரியன் எம்.எல்.ஏ. முன்னிலையிலும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஊராட்சிகளின் திட்ட இயக்குனர் செல்வராணி, உதவி இயக்குனர் ரத்தினமாலா, கோட்டாட்சியர் பவித்ரா, வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, ஆவின் தலைவர் ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர் திலகவதி நாகராஜன், தாசில்தார் ராஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அய்யப்பன், செல்வகணேஷ், ஒன்றிய கவுன்சிலர் தனவேல், ஊராட்சிமன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்