கிராமப்புற பஸ்கள் சரிவர இயக்காததால் பொதுமக்கள் அவதி

Update: 2023-05-06 15:57 GMT


மடத்துக்குளம் பகுதி கிராமப்புறங்களில் இயக்கப்பட்ட பல பஸ்கள் தற்போது சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

லாப நோக்கம்

ஏழை, நடுத்தர மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் உதவியாக இருப்பது பொதுப் போக்குவரத்து வாகனமான அரசு பஸ்கள் ஆகும். கொரோனா தாக்குதல் தீவிரமாக இருந்த நேரத்தில் பல கிராமப்புற பஸ்கள் நிறுத்தப்பட்டன. அவற்றில் பல பஸ்கள் திரும்பவும் இயக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. அத்துடன் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு அதனால் ஆகும் செலவினங்களை ஈடுகட்டும் வகையில், வருவாய் குறைந்த பல கிராமப்புற பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். தனியார் பஸ்களைப் போல லாப நோக்கம் மட்டுமே கொண்டு அரசு பஸ்களை இயக்குவது சரியான முடிவாக இருக்க முடியாது. கிராமப்புற பஸ்களை லாப நோக்கம் கருதாமல் பொதுமக்கள் நலன் கருதியே இயக்க வேண்டும்.

அரசு பஸ்

மடத்துக்குளத்தையடுத்த கிளுவங்காட்டூர் வழியாக பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கிளுவங்காட்டூரில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் வழியாக 2 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதில் உடுமலையிலிருந்து ஜக்கம்பாளையம், கிளுவங்காட்டூர், பார்த்தசாரதிபுரம், குமரலிங்கம் வழியாக கல்லாபுரம் செல்லும் 32 ஏ என்ற எண் கொண்ட அரசு பஸ் அதிகாலை 6 மணிக்கு உடுமலையிலிருந்து பயணத்தைத் தொடங்கி 6 முறை ஊருக்குள் வரும். ஆனால் தற்போது இந்த பஸ் உரிய நேரத்தில் முறையாக இயக்கப்படுவதில்லை. எப்போது வரும் எப்போது போகும் என்று தெரியாத நிலையே உள்ளது. இதுகுறித்து நடத்துனரிடம் கேட்டால் அடுத்த சிங்கிள் இன்னும் லேட்டாக வருவேன். எப்படி வேலைக்கு போவீர்கள் என்று பார்க்கலாம் என்று சவால் விடுவது போல பேசுகிறார். இதனால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

முதல்-அமைச்சருக்கு மனு

உடுமலையிலிருந்து ஜக்கம்பாளையம், கிளுவங்காட்டூர், எலையமுத்தூர், கல்லாபுரம் வழித்தடத்தில் அமராவதி செல்லும் 37-ம் எண் அரசு பஸ் முன்பு பலமுறை இயக்கப்பட்டு வந்தது. தற்போது காலை மற்றும் மாலை வேளைகளில் என ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே இயக்கப்படுகிறது. 2 பஸ்களும் பெரும்பாலும் மதியத்துக்கு மேல் இயக்கப்படுவதில்லை. இதனால் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு வேலைகளுக்காக வெளியில் சென்றவர்கள் ஊர் திரும்புவதில் சிரமங்களை சந்திக்கின்றனர்.

எனவே கிராமப்புற மக்கள் பெருமளவில் நம்பியிருக்கும் அரசு பஸ்களை உரிய நேரத்தில் முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து முதல்-அமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர், எம்.எல்.ஏ, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை மண்டல மேலாளர், உடுமலை கிளை மேலாளர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்