டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி சார்பில் கிராம தத்தெடுப்பு திட்டம்
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி சார்பில் கிராம தத்தெடுப்பு திட்டம் நிகழ்ச்சி நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் காந்திபுரத்திலுள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் கிராம தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி மற்றும் திருச்செந்தூர் சிட்டி லயன்ஸ் சங்கம் ஆகியவை இணைந்து காந்தி ஜெயந்தி உலக சேவை தினம், ஐக்கிய நாடுகள் சபை தினம், பசிப்பிணி போக்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய ஐம்பெரும் விழாக்கள் நடைபெற்றன. விழாவிற்கு திருச்செந்தூர் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் வி.சந்திரசேகர் தலைமை தாங்கினார். காந்திபுரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பி.ஆரோக்கிய ஜெயந்தி வரவேற்று பேசினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் பொ.சுவாமிதாஸ் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் லயன்ஸ் சங்கத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வட்டார தலைவர்கள் கலந்து கொண்டனர். கிராம தத்தெடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் இ.சுந்தர்கணேஷ் சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், வகுப்பு வாரியாக தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், நோய் தடுப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசரங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உதவி ஆசிரியர் ராஜலட்சுமி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை லயன்ஸ் சங்க செயலர் தை. அமல்ராஜ் செய்திருந்தார்.