கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கோரிக்கையை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு உதவி கலெக்டரின் தொடர் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், வெம்பாக்கம் வட்ட கிளை உறுப்பினர் ஜி.பச்சையப்பனை எவ்வித முகாந்திரமும் இன்றி, சேத்துப்பட்டு வட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டதை ரத்து செய்து மீண்டும் அவரை அதே இடத்தில் பணியிடம் வழங்கிட வலியுறுத்தி செய்யாறு வருவாய் கோட்டத்தில் உள்ள செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய நான்கு தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று செய்யாறு வருவாய் கோட்டத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் உதவி கலெக்டர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். இதில் மாநில பொது செயலாளர் சுரேஷ் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். போராட்டத்தின் போது உதவி கலெக்டரை கண்டித்து போஸ்டர் ஓட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.