பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது

குடியாத்தம் அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-26 18:45 GMT

குடியாத்தம்

குடியாத்தம் அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கிராம நிர்வாக அலுவலர்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஊராட்சி ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மேகநாதன் (வயது 28). போர்வெல் மெக்கானிக்காக உள்ளார். இவர் தனது வீட்டுமனை பட்டாவிற்கு பெயர் மாற்றம் செய்ய அக்ராவரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு செய்தார்.

இதனை பரிசீலித்து பெயர் மாற்றம் செய்து தருவதாக அவரிடம் கிராம நிர்வாக அலுவலரான கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மேகநாதன் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு பலமுறை சென்றும் பட்டா பெயர் மாற்றம் செய்து தரவில்லை. அது குறித்து கேட்டபோது கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் உதவியாளரான பெரும்பாடி கிராமத்தை சேர்ந்த தேன்மொழி ஆகியோர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்

ஆனால் லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத மேகநாதன் அது குறித்து வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகள் 20 என மொத்தம் 10 ஆயிரம் ரூபாயை நேற்று மதியம் அக்ராவரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் தேன்மொழியிடம் மேகநாதன் வழங்கினார்.

அப்போது அங்கு மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் விஜய் உள்ளிட்ட போலீசார் மேகநாதனிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் உதவியாளர் தேன்மொழியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் உதவியாளர் தேன்மொழி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் மாற்றம்

கைது செய்யப்பட்ட ஜெயமுருகன் குடியாத்தம் டவுன் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி சில மாதங்களுக்கு முன்பு தான்அக்ராவரம் கிராமத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பெண் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்