ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர்-உதவியாளர் கைது

ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர்-உதவியாளர் கைது

Update: 2022-09-21 18:45 GMT

பேரளத்தில், பட்டா மாறுதல் செய்ய விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரையும், இதற்கு உதவியாக இருந்த கிராம உதவியாளரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பட்டா மாறுதல்

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கொல்லுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முகமது தஜ்மில். விவசாயியான இவர் தனது விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக பேரளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து இருந்தார்.

அங்கு பணியில் இருந்த பேரளம் கிராம நிர்வாக அலுவலர்(பொறுப்பு) தேவதாஸ்(வயது 56) என்பவரிடம் முகமது தஜ்மில், பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு பட்டா மாறுதல் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என தேவதாஸ் கூறியுள்ளார்.

ரூ.8 ஆயிரம் லஞ்சம்

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத முகமது தஜ்மில் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி நேற்று கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர்(பொறுப்பு) தேவதாசிடம், முகமது தஜ்மில் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அருண்பிரசாத், சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் லஞ்சம் வாங்கிய தேவதாசை கையும், களவுமாக பிடித்தனர்.

கைது

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவதாசை கைது செய்தனர். மேலும் இதற்கு உதவியாக இருந்த கிராம உதவியாளர் சதீஸ்குமார்(36) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டா மாறுதல் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்