பெண்ணிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

இறப்பு சான்றிதழ் வழங்க பெண்ணிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-28 19:04 GMT

குறிஞ்சிப்பாடி, 

இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணத்தை சேர்ந்தவர் மார்டின் கருணாநிதி மகள் ஜான்சிராணி(வயது 40). இவரது பாட்டி தவமேரி என்பவர் வயது முதிர்வின் காரணமாக கடந்த 8-ந் தேதி இறந்தார். இதையடுத்து ஜான்சிராணி, தனது பாட்டியின் இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக கல்குணம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார்.

அப்போது அவர் கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரத்திடம் தனது பாட்டி இறந்த தகவலை கூறி, இறப்பு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கூறினார். இதற்காக தனக்கு ரூ.1,000 கொடுத்தால் இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்தார்.

வீட்டிலும் சோதனை

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜான்சிராணி, இதுகுறித்து கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறிய அறிவுரைப்படி ஜான்சிராணி நேற்று ரசாயன பொடி தடவிய 1,000 ரூபாயுடன் கல்குணம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த சண்முகசுந்தரத்திடம், பணத்தை ஜான்சிராணி கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார், சண்முகசுந்தரத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதற்கிடையே குறிஞ்சிப்பாடியில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்