ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

நெல்லையில் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-26 21:09 GMT

நெல்லையில் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

பட்டா பெயர் மாற்றம்

நெல்லை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் தங்கபாண்டி (வயது 35). இவர் தள்ளுவண்டியில் பானிபூரி விற்பனை செய்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கபாண்டி பாளையஞ்செட்டிகுளத்தில் தலா 2.75 சென்ட் கொண்ட 2 பிளாட்களை வாங்கினார். அதற்கு தனது பெயரிலும், தன் மனைவி பெயரிலும் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்தார்.

ரூ.8 ஆயிரம்

கடந்த 22-ந் தேதி தங்கபாண்டியை செல்போனில் தொடர்பு கொண்டு பாளையஞ்செட்டிகுளம் கிராம நிர்வாக அலுவலரான தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (40) என்பவர் பேசினார்.

அப்ேபாது அவர், பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கபாண்டி, என்னால் அவ்வளவு பணத்தை கொடுக்க முடியாது. நாங்கள் கஷ்டப்படுகிறோம் என்று கூறியுள்ளார். இதனால் சுப்பிரமணியன் ரூ.8 ஆயிரம் கொடுங்கள் என்று பேரம் பேசியுள்ளார்.

ரசாயன பவுடர்

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத தங்கபாண்டி நேற்று காலையில் நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மெக்லரின் எஸ்கால் உத்தரவின் பேரில், ரூ.500 நோட்டுகள் என மொத்தம் ரூ.8 ஆயிரத்தை ரசாயன பவுடர் தடவி கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியனிடம் கொடுக்கும்படி கூறி தங்கபாண்டியிடம் போலீசார் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

அதிரடி கைது

இதையடுத்து நெல்லை சமாதானபுரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தங்கபாண்டி காலை 11 மணிக்கு சென்றார். அவர் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியனிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.8 ஆயிரத்தை கொடுத்தார். அதனை வாங்கிய அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சீத்தாராமன், சண்முகநயினார், தலைமை காவலர்கள் பிரகாஷ், ஜேம்ஸ், ராபீன்ராஜ் உள்ளிட்டவர்கள் அதிரடியாக சென்று லஞ்சம் வாங்கிய சுப்பிரமணியனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பரபரப்பு

தொடர்ந்து சுப்பிரமணியனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவரை, சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நெல்லையில் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்