தேவர் சிலைக்கு 10½ கிலோ எடையில் வெள்ளிகவசம் வழங்கிய ஓ.பன்னீர்செல்வம்

பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு 10½ கிலோ எடையில் வெள்ளி கவசத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். அ.தி.மு.க. சார்பில் இதை வழங்கி இருப்பதாக அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

Update: 2022-10-30 18:14 GMT


பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு 10½ கிலோ எடையில் வெள்ளி கவசத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். அ.தி.மு.க. சார்பில் இதை வழங்கி இருப்பதாக அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

வெள்ளி கவசம்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா நேற்று நடந்தது. தேவர் நினைவிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் வெள்ளி ருத்ராட்ச மாலை அணிவித்து தீபாராதனை காண்பித்தார்.

அதை தொடர்ந்து தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார். அவர்களிடம், தேவர் சிலைக்கான வெள்ளி கவசத்தை வழங்கினார். இது 10½ கிலோ எடை கொண்டதாகும்.

அப்போது, அவரது தரப்பு அ.தி.மு.க. நிர்வாகிகள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், வெற்றிவேல், எம்.பி.க்கள் ரவீந்திரநாத், தர்மர், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்..ஏ. உள்பட பலர் உடன் இருந்தனர்.

பேட்டி

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேவரின் புகழ் இந்த உலகம் இருக்கும் வரை நிலைத்து இருக்கும். இந்த புண்ணிய பூமிக்கு வருகின்ற போெதல்லாம் எங்களுக்கு நினைவூட்டும் நிகழ்வாகவே இருக்கிறது. அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்காக போராடியவர்.

நாட்டின் விடுதலைக்காக சிறையில் வாழ்ந்த தெய்வமகன் பசும்பொன் தேவர். அவரின் எண்ணங்கள் சரித்திரத்தில் நிலைத்து இருக்கும். இந்திய நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, அனைத்து மக்களும், சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தங்களின் வாழ்க்கை நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், இன்றைக்கு திருநாடு எல்லா வளமும் பெற்று திகழ்கிறது.

வங்கியில் கடிதம் கொடுத்தோம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பசும்பொன் தேவருக்கு 13.5 கிலோ எடையில் தங்கத்தில் கவசத்தை குருபூஜை நடக்கும் நன்நாளில் சாற்றப்பட வேண்டும் என்று அதற்கு கட்சியின் பொருளாளரான என்னையும், தேவர் திருக்கோவில் அறங்காவலராக பெரியம்மா காந்தி மீனாளையும் பணித்திருந்தார்கள். அதன்படி அந்த தங்ககவசத்தை ேதவர் ஜெயந்தியின்போது கொண்டு வந்து, தேவர் சிலைக்கு சாற்றிவிட்டு அதனை வங்கியில் வைக்கும் பழக்கம் இருந்தது.

2017, 2022-ம் ஆண்டுகளில் எதிர்பாராத விதமாக அந்த நிகழ்வு தடை பட்டு இருக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நான், இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்றால், அரசிடம் தங்க கவசத்தை கொடுத்து தேவர் குருபூஜைக்கு எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் எப்போதுபோல் சாற்றப்பட வேண்டும் என்று ஏற்கனவே 25 தினங்களுக்கு முன்பு வங்கியில் கடிதம் கொடுத்து விட்டோம். ஆனால் சீனிவாசன் தற்காலிக பொருளாளர் என்று சொல்லிக்கொண்டு அவர்தான் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நாங்களும் எதிர் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் நாங்கள் தேவரின் குருபூஜைக்கு தங்க கவசம் சென்றடைய வேண்டும். இதுதான் முறையான செயல் என்பதை நாங்கள் உணர்ந்தி இருக்கிறோம்.

ஆகவே இம்முறை மாவட்ட நிர்வாகத்திடம் தங்க கவசத்தை கொடுத்து அவர்களே, கொண்டு சென்று அறக்கட்டளையின் தலைவராக உள்ள காந்திமீனாளிடம் வழங்கி, அவர் தேவருக்கு அதனை சாற்றி, மீண்டும் அதனை வங்கியில் வைப்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று ஒப்புதலை முழுமனதாக தருகிறோம் என்று 25 நாட்களுக்கு முன்னர் கடிதம் கொடுத்ததை தெரிவித்தோம். ஆனால் அவர்கள் எங்களிடம்தான் தரவேண்டும் என்று வழக்கு போட்டார்கள்.

அ.தி.மு.க. சார்பில் வெள்ளிகவசம்

ஆனால் மதுரை ஐகோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. எங்களின் கோரிக்கையில் இருக்கின்ற நியாயத்தின் அடிப்படையில், அந்த தங்ககவசத்தை அறக்கட்டளை தலைவரிடம் மாவட்ட நிர்வாகம் தர வேண்டும் என்று உத்தரவிட்டது.

இன்றைக்கு அ.தி.மு.க. சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு வெள்ளிகவசம் வழங்கியுள்ளோம். இங்குள்ள அறக்கட்டளை நிர்வாகத்தினர் அந்த வெள்ளி கவசத்தை அவர்கள் பொறுப்பில் வைத்துக்கொண்டு எப்போதெல்லாம் விஷேச நாட்களில் சாற்ற வேண்டுமோ அப்போதெல்லாம் அவர்கள் முறைப்படி சாற்றுவதற்கு உரிமை கொடுத்துள்ளோம். அ.தி.மு.க. ஒருங்கிைணப்பாளர் நான் தான். அந்த அடிப்படையில் அ.தி.மு.க சார்பில் நான் வழங்கியிருக்கிறேன். அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார். முன்னதாக பசும்பொன் வந்த அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்