விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்

விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நல குறைவால் இன்று காலமானார்.

Update: 2024-04-06 05:22 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட அத்தியூர் திருவாதியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது71). தி.மு.க. மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடியின் தீவிர நெருங்கிய நண்பரான இவர் 1973ல் தி.மு.க. கிளை செயலாளராக பணியாற்றியவர். 1980-86ல் தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக இருந்தவர். 

2019ம் ஆண்டு விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த தொகுதியில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதன் பின்னர் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் அதே விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. சார்பாக போட்டியிட்டு 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் இவர் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக பணியாற்றி வந்தவர்.

நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பொதுக் கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்த நிலையில், அக்கூட்டத்தில் புகழேந்தி கலந்து கொண்டார். அப்போது திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் அருகில் இருந்தவர்கள் அவரை விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். புகழேந்தியின் மறைவிற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து தனது நெருங்கிய நண்பரான புகழேந்தியின் உடலுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்