நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கிய விக்கிரவாண்டி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

மகத்தான வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-14 10:53 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் களத்தில் கழக வேட்பாளர் அன்னியூர் சிவா தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ம.க வேட்பாளரை 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த மகத்தான வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடாமல் அ.தி.மு.க. ஒதுங்கி நின்று, தனது கள்ளக்கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. தி.மு.க. வெளிப்படையான ஜனநாயக நெறிமுறைப்படி களம் கண்டது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மைச் சமுதாயத்தினர் வசிக்கின்ற விக்கிரவாண்டி தொகுதியில் சமூகநீதிக் கொள்கை வழியாக அந்தந்தச் சமுதாயங்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் காண வழிவகுத்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் என்பதை தொகுதிவாசிகள் மறந்துவிடவில்லை. கடந்த மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, வளர்ச்சிப் பாதையில் அவர்களை அழைத்துச் செல்கிறது. இடைத்தேர்தல் பரப்புரையில் வி.சி.க. தலைவர் அன்புச் சகோதரர் முனைவர் தொல். திருமாவளவன் எம்.பி. அவர்கள் இதனைச் சிறப்பாக எடுத்துக்காட்டி வாக்கு சேகரித்து வெற்றிக்குத் துணை நின்றார்

கழக அரசுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட சதிகள், சாதி - மத வன்முறையைத் தூண்டுவதற்கான வேலைகள், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் மீதும் கழகத்தின் மீதும் வைக்கப்பட்ட மலிவான - மட்டமான அவதூறுகள், எதிராகக் களத்தில் நின்றவர்களும் - நிற்பதற்குப் பயந்தவர்களும் உருவாக்கிக் கொண்ட ரகசிய ஒப்பந்தங்கள் இவை எல்லாவற்றையும் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் முறியடித்து, மகத்தான வெற்றியை வழங்கியிருக்கிறார்கள் என்பதுதான் மகிழ்ச்சிக்கான காரணம். மக்கள் எதிர்பார்க்கின்ற திட்டங்களை அறிவித்து அவற்றை முழுமையாகச் செயல்படுத்துவதும், யாரும் எதிர்பாராத எந்த ஒரு அசம்பாவித நிகழ்வு நடந்தாலும் அதற்குப் பொறுப்பேற்றுச் செயல்பட்டு அதனைச் சரிசெய்யும் நேர்மைத் திறமும் நிர்வாகத் திறனும் கொண்டதுதான் திராவிட மாடல் அரசு.

திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்களுக்கு நற்சான்றிதழ் அளித்துத் தி.மு.கழகத்திற்கு மகத்தான வெற்றியை வழங்கி, அவதூறுகள் பரப்பி - சதி செய்ய நினைத்த வீணர்களுக்கு விடையளித்திருக்கிறார்கள் விக்கிரவாண்டி வாக்காளர்கள். இந்த வெற்றியைத் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்குக் காணிக்கையாக்கி, மக்களுக்குத் தொண்டாற்றும் நம் பணியைத் தொடர்ந்திடுவோம். தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியுடன், நாடு தழுவிய அளவில் 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. அடுத்தடுத்த தேர்தல் களங்களுக்கு ஆயத்தமாவதுடன் அடுத்தடுத்த தலைமுறையினரின் வளர்ச்சிக்கான சிந்தனைகளுடனும் அதனைச் செயல்படுத்தும் வலிமையுடனும் பயணிப்போம்!."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்