ஆசிரமத்தில் தங்கி இருந்த மேலும் 2 பேர் மாயம்அடுத்தடுத்த புகாரால் 5-வது வழக்கு பதிவு

ஆசிரமத்தில் தங்கி இருந்த மேலும் 2 பேர் மாயமானார்கள். அடுத்தடுத்த புகாரால் ஆசிரமம் மீது 5-வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-02-17 18:45 GMT


விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் பலர் மாயமாகி விட்டதாக புகார்கள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக கெடார் போலீஸ் நிலையத்தில் தற்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நேற்று முன்தினம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலப்பாகுளம் பாரதி நகரை சேர்ந்த சிவசங்கரனின் மனைவி லட்சுமியம்மாள், அவரது மகன் முத்துவிநாயகம் ஆகிய இருவரையும் காணவில்லை என்று அவரது உறவினர் நடராஜன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தஞ்சாவூர் பெண் மாயம்

இதனிடையே நேற்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த நாடிமுத்து மகன் அருண்குமார் (வயது 19) என்பவர் கெடார் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார்.

அந்த புகாரில் எனது தந்தை கடந்த 2008-ல் இறந்துவிட்டார். அதன் பின்னர் ஒரு வருடத்தில் எனது தாய் பத்மா (47) மனநலம் பாதிக்கப்பட்டார். அவரை கடந்த 27.11.2022 அன்று குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் கொண்டு வந்து சேர்த்தேன். அதன் பிறகு ஒரு மாதம் கழித்து ஆசிரம நிர்வாகியை தொடர்புகொண்டு எனது தாயை பார்க்க வருவதாக கூறினேன். அதற்கு 6 மாதம் வரை யாரையும் பார்க்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

இந்த சூழலில் தற்போது தொலைக்காட்சியில் வரும் செய்தியை பார்த்து குண்டலப்புலியூர் வந்தேன். ஆனால் எனது தாய் எங்கு சென்றார், என்ன ஆனார் என தெரியவில்லை. அவரை கண்டுபிடித்துத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

புதுச்சேரியை சேர்ந்தவர்

இதேபோன்று புதுச்சேரி தட்சிணா மூர்த்தி நகரை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் மனநலம் பாதிக்கப்பட்ட தனது அண்ணன் நடராஜன்(47) என்பவரை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்துள்ளார்.

இதன் மூலம் ஆசிரமத்தில் இருந்தவர்கள் 5 பேர் மாயமாகி இருப்பதாக அவர்களது உறவினர்கள் தனித்தனியே புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், மாயமானவர்கள் தொடர்பான புகார்கள் இன்னும் மேற்கொண்டு அதிகரிக்கும் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்