70 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய விஜயகாந்த்: தொண்டர்களை பார்த்து இரு கைகளையும் உயர்த்தினார்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு இன்று 70-வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாக கட்சியினர் கொண்டாடுவது வழக்கம்.
இந்த வகையில் 70-வது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள், ரத்த தானம் வழங்குதல் போன்றவை நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டன. வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வந்த விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு வருவாரா? அவரை பார்க்க முடியுமா என்று தொண் டர்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.
இந்த நிலையில் பிறந்தநாளையொட்டி விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்து தொண்டர்களை சந்திப்பார் என்று அவரது மனைவி பிரேமலதா அறிவித்தார். அதைத் தொடர்ந்து இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூற கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டனர்.
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி அலுவலகத்திற்கு குவிந்தனர். பூக்கொத்து, மாலை, பழத்தட்டுகளுடன் காத்திருந்தனர். பகல் 12 மணிக்கு விஜயகாந்த் காரில் அங்கு வந்து இறங்கினார். அவருடன் பிரேமலதா வந்தார். விஜயகாந்தை பார்த்ததும் தொண்டர்கள் கேப்டன் வாழ்க என கோஷமிட்டனர்.
பின்னர் அலுவலக நுழைவு வாசலில் போடப் பட்டு இருந்த நாற்காலியில் விஜயகாந்த் அமர்ந்தார். அப்போது தொண்டர்களின் வாழ்த்து கோஷம் அதிர்ந்தது. அவர் சிரித்தபடியே கைகூப்பி தொண்டர்களை பார்த்து வணங்கினார். உற்சாகமாக கைகளை அசைத்ததோடு வெற்றியை குறிக்கும் வகையில் பெரு விரலையும் வளைத்து காட்டினார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
தொண்டர்களின் வாழ்த்து மழையில் நனைந்த விஜயகாந்த் உற்சாக மிகுதியால் கைகளை உயர்த்தி மீண்டும் அசைத்தார். விஜயகாந்த் அருகில் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் எல்.கே.சுதீஷ் மற்றும் தலைமை நிர்வாகிகள் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் வேளச்சேரி பிரபாகரன், இ.சி.ஆனந்தன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நின்று தொண்டர்களை அமைதிப் படுத்தினர்.
முன்னதாக விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் தொண்டர்களை பார்த்து கையசைத்தனர். கடந்த ஆண்டு பிறந்த நாளை காட்டிலும் தற்போது விஜயகாந்த் உற்சாகமாக இருப்பதாக தொண்டர்கள் தங்களுக்குள்ளே கூறிக் கொண்டதை காண முடிந்தது.
விஜயகாந்துக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரோபோ சங்கர் குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். நடிகை வடிவுக்கரசி, நகைச்சுவை நடிகர்கள் முத்துக்காளை, போண்டாமணி, கிங்காங் ஆகியோரும் விஜயகாந்துக்கு நேரில் வாழ்த்து கூறினார்கள்.
தனது 70வது பிறந்தநாளில், தொண்டர்களை பார்த்ததில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மகிழ்ச்சி என்று அவரது மனைவி பிரேமலதா கூறினார்.