அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-07-01 18:25 GMT

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வரும் மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகள். அரசாணை 354-ஐ 2017 முதல் அமல்படுத்தி நிலுவைத் தொகையுடன் செயல்படுத்த வேண்டும், ஆறு ஆண்டுகள் நடத்தப்படாமல் உள்ள பல் மருத்துவர்கள் மற்றும் சிடிஎஸ், ஸ்பெஷாலிட்டிக்கான பதவி உயர்வு கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும்.

பதவி உயர்வுக்கான அடிப்படை தகுதியாக இரண்டு ஆண்டு கிராமப்புற சேவையை கொண்டு வருதல், கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசிடமிருந்து நிவாரணம் தரப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.

சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வரும் நிலையில், அதற்கான பங்களிப்பை தரும் அரசு மருத்துவர்களுக்கு, தகுதிக் கேற்ற ஊதியம் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை தர மறுப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. கரோனா வைரஸுக்கு மத்தியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் நலனுக்காக உழைக்கும் மருத்துவர்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அளப்பறிய பணியாற்றி கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்