சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் - நடிகர் ரஜினிகாந்த்
தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார். மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார். தமிழ்நாட்டு மக்கள் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டனர். தேமுதிக பொதுக்குழுவில் சோர்வாக விஜயகாந்தை பார்த்ததும் வருந்தினேன். உடல்நலம் தேறிவிடுவார் என நம்பினோம். அன்பு நண்பரை இழந்தது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது மனைவி பிரேமலதா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள், தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் காமராஜர் சாலையில் இருந்தும், மன்றோ சிலை மற்றும் சென்டிரல் வழியாகவும் தீவுத்திடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவோருக்காக குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படும் கேப்டன் விஜயகாந்தின் உடல்
சென்னை,
தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத் திடலில் வைக்கப்பட உள்ளது. இதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. வழி நெடுகிலும் கேப்டன்.. கேப்டன்.. என்று ரசிகர்கள், தொண்டர்கள், பொது மக்கள் ஆகியோர் முழக்கமிட, அவரது உடல் கொண்டு செல்லப்படும் வாகனம் ஊர்ந்து செல்கிறது.
தீவுத்திடலுக்கு இன்று காலை 6 மணிக்கு கொண்டு செல்லப்படும் விஜயகாந்தின் உடல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பிறகு அங்கிருந்து ஊர்வலமாக தேமுதிக தலைமை அலுவலகம் நோக்கி எடுத்து வரப்பட்டு இன்று மாலை 4.45 மணிக்கு அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.
விஜயகாந்த் மரணம்: சினிமா படப்பிடிப்புகள் இன்று ரத்து
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் அனைவரையும் ஒருங்கிணைத்தவர் விஜயகாந்த்.
திரைப்பட தயாரிப்பாளர்களை ‘‘முதலாளி’’ என அன்போடு அழைத்தவர். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் அன்பு பாராட்டியவர். தமிழ் திரை உலகின் நலனுக்காக உழைத்தவர். தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் நலத்திட்டங்கள் வழங்கி மகிழ்ந்தவர். அவரது மறைவு பேரிழப்பாகும்.
மனித நேய மிக்க விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 29-ந்தேதி (இன்று) படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து அவரது இறுதி பயணத்தில் பங்கேற்போம்" என்று கூறியுள்ளனர்.
நள்ளிரவைக் கடந்தும் குறையாத கூட்டம்.. விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு அங்கிருந்து ஊர்வலமாக தேமுதிக தலைமை அலுவலகம் எடுத்து வரப்பட்டு இறுதி சடங்குகளோடு மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி இன்று விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவைக் கடந்தும் மக்கள் கூட்டம் குறையாமல் இருந்து வருகிறது. விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள், தே.மு.தி.க தொண்டர்கள் என ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் உடலைப் பார்த்து கதறி அழுத பெண்களை, பிரேமலதா விஜயகாந்த கட்டியணைத்து தேற்றினார்.
விஜயகாந்த் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்துகிறார் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
மறைந்த விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத் திடலில் வைக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு மாற்றப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி வரை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இன்று மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று மத்திய அரசு சார்பில் விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் பிரதிநிதி ஒருவர் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். இதன்படி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விஜயகாந்த் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விஜயகாந்த் மறைவுக்கு நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருந்தார். மேலும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தி இருந்தார்.