கோவில்கள், பள்ளிகளில் விஜயதசமி விழா

மாவட்டம் முழுவதும் கோவில்கள், பள்ளிகளில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. அரிசியில் குழந்தைகளுக்கு 'அ'கரம் எழுத பெற்றோர் கற்றுக் கொடுத்தனர்.

Update: 2022-10-05 19:30 GMT

விஜயதசமி விழா


விஜயதசமி நாளில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதும், அவர்களுக்கு எழுத கற்றுக் கொடுப்பதும் வழக்கமாக உள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்கள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் நேற்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.


கோவில்களில் நடந்த விழாவுக்கு, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்தனர். கோவில் வளாகத்தில் அமர்ந்து, மஞ்சள் தடவிய அரிசி அல்லது நெல்லில் 'அ'கரம் உள்ளிட்ட எழுத்துகளையும், கடவுள் பெயர், குழந்தைகளின் பெயர்களையும் குழந்தைகளின் கை விரல் பிடித்து பெற்றோர்கள் எழுத சொல்லிக் கொடுத்தனர். அதன்படி, தேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பெற்றோர்கள் குழந்தைகளுடன் பங்கேற்று தங்களின் பிள்ளைகளுக்கு அரிசியில் எழுத கற்றுக் கொடுத்தனர்.


பள்ளிகள்


தேனி அருகே வாழையாத்துப்பட்டி அரசு கள்ளர் பள்ளியில் நடந்த விஜயதசமி விழாவில் தலைமை ஆசிரியர் வசந்தவள்ளி முன்னிலையில் மாணவர் சேர்க்கை நடந்தது. பள்ளியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


அதுபோல் மாவட்டம் முழுவதும் ஏராளமான மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் விஜயதசமியையொட்டி நேற்று மழலையர் வகுப்புகளுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை நேற்று நடந்தது. பள்ளிகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து குழந்தைகளுக்கு அரிசியில் 'அ'கரம் உள்ளிட்ட எழுத்துகளை எழுத சொல்லிக் கொடுத்தனர். ஏராளமான பெற்றோர் இந்த நாளில் தங்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டினர்.


உத்தமபாளையம்


உத்தமபாளையம் மெயின் பஜார் வீதியில் யோக நரசிங்க பெருமாள் கோவிலில் விஜயதசமியையொட்டி வன்னிய சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் குதிரை வாகனத்தில் யோக நரசிங்க பெருமாள் ராஜ அலங்காரத்தில் வில் அம்புடன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். பின்னர் அங்குள்ள ஆற்றங்கரையில் வன்னிய சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


இதேபோல் கம்பத்தில் உள்ள கம்பராயப்பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி வாழை கன்றை அசுரனாக பாவித்து அம்பு எய்தும் நிகழ்ச்சி நடந்தது.


கம்பம் காசி விசுவநாதர் கோவிலில் சாமி வெள்ளை குதிரை வாகனத்தில் வலம் வந்து அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளானமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


உப்புக்கோட்டை


வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டையில் வரதராஜ பெருமாள் கோவிலில் விஜயதசமியையொட்டி, நேற்று அம்புடன் எழுந்தருளிய வரதராஜபெருமாள், பத்மாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பத்மாசுரனாக வாழைமரத்தை வைத்திருந்தனர். வதம் செய்த உடனே வாழை மரத்தை வெட்டினர்.


அதில் கட்டியிருக்கும் காணிக்கை ரூ.ஆயிரத்தை அப்பகுதி இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு எடுத்தனர். நிகழ்ச்சியில் பாலார்பட்டி, குண்டல்நாயக்கன் பட்டி, டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்