ராகுல் காந்தி கூறிதான் விஜய் கட்சி ஆரம்பித்தார் - விஜயதாரணி
பா.ஜனதாவில் பெண்களுக்கு அங்கீகாரம் அளிப்பதை பார்க்க முடிகிறது என்று விஜயதாரணி கூறியுள்ளார்.;
சென்னை,
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி கட்சியில் தனக்கு முக்கிய பதவிகள் தரவில்லை என்ற அதிருப்தி காரணமாக, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜனதாவில் இணைந்தார். அவருக்கு நாடாளுமன்றத் தேர்தல் அல்லது விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் அக்கட்சி சீட் தரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், விஜயதாரணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. அத்துடன், கட்சியில் சேர்ந்து ஆறு மாதங்களாகியும் இன்னும் பொறுப்பு எதுவும் கூட வழங்கப்படவில்லை. இதனை நேற்று பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாக பேசிய விஜயதாரணி, நான் இருப்பதையும் விட்டுவிட்டு பா.ஜனதாவில் இணைந்தேன். எதிர்பார்ப்போடுதான் பா.ஜனதாவுக்கு வந்தேன். ஆறு மாதங்கள் ஆகிவிட்டாலும் இன்னும் பதவி கொடுக்கவில்லை என்று பேசியது சர்ச்சைகளை உண்டாக்கியது.
இந்த நிலையில் விஜயதாரணி இன்று அளித்த பேட்டியில், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு இருக்கும் என சொல்லப்பட்டது. ஒரு மூத்த தலைவர் தனக்கு சீட் வேண்டும் என பிடிவாதமாக இருந்ததால் அவருக்கு தரப்பட்டது. ஆனாலும் மன வருத்தம் இன்றி அவருக்காக தேர்தல் பணியாற்றினேன். அந்த வாய்ப்பு இல்லை என்றாலும் கட்சியில் பதவி தரப்படும் என நினைத்தேன்.
எப்போது புது பதவி வரும் என எனக்கு நாள்தோறும் செல்போன் அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. பதவியே தரவில்லை என விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் பொறுப்பு கேட்டேன். பா.ஜனதாவில் பெண்களுக்கு அங்கீகாரம் அளிப்பதை பார்க்க முடிகிறது. எனக்கும் வாக்குறுதி அளித்துள்ளனர்.
பா.ஜனதாவில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன் முடிவில் கட்சிப் பதவி என்னவாக இருக்கும் என்பது தெரியவரும். எனக்கு அங்கீகாரம் தருவோம் என அண்ணாமலை நான் பேசிய அதே மேடையில் தெரிவித்துள்ளார்.
நான் காங்கிரசில் இருந்தபோது டெல்லியில் நடிகர் விஜய்யிடம் கட்சி தொடங்க வேண்டும் என ராகுல்காந்தி கூறினார். ராகுல் காந்தி அறிவுரையின் அடிப்படையிலேயே விஜய் கட்சி தொடங்கியுள்ளார். வரும் காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது. மத்திய இணைமந்திரி எல்.முருகன் தமிழர் அல்ல என கூறும் சீமான் தன்னுடைய பாரம்பரியத்தை சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.