ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் விறு விறுப்பான வாக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் விறு, விறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

Update: 2022-07-09 18:56 GMT

வாக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் 7-வது வார்டு, தொண்டைமான் ஊரணி, தென்னங்குடி, நெடுங்குடி, மேலப்பட்டு, வெட்டுக்காடு ஆகிய ஊராட்சி மன்ற தலைவர், செங்கீரை ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

தேர்தல் வாக்குப்பதிவிற்காக 119 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச்சாவடி மையங்கள் முன்பு நேற்று காலையிலேயே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். குறிப்பாக கூலிவேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் நேற்று காலையிலேயே தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு பணிக்கு சென்றனர். தேர்தல் நடைபெற்ற கிராமப்புறங்களில் விறு, விறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

முககவசம்

புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலர் 7-வது வார்டிற்கு உட்பட்ட பகுதியான புத்தாம்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளியில் வாக்காளர்கள் கூட்டம் காலை 10 மணி வரை அதிகமாக இருந்தது. அதன்பின் சற்று கூட்டம் குறைந்தது. ஒவ்வொரு நபராக வந்து வாக்களித்தப்படி இருந்தனர்.

இதனால் அந்த மையங்களில் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி இருந்தன. நேரம் செல்ல செல்ல வாக்காளர்கள் வரத்தொடங்கினர். அதன்பின் வாக்குப்பதிவு மும்முரமாக நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்காளர்களுக்கு கைகளை கழுவ கிருமி நாசினி வழங்கப்பட்டன. மேலும் முக கவசமும் இலவசமாக வழங்கப்பட்டன.

வாக்குச்சீட்டு

வாக்காளர்கள் பெயர், வாக்குச்சாவடி எண் பட்டியலில் சரிபார்க்கப்பட்டு இடது கையில் ஆள்காட்டி விரலில் அழியா மை வைக்கப்பட்டது. வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்ய வாக்குச்சீட்டு கொடுக்கப்பட்டன. அதில் விரும்பிய வேட்பாளர்களுக்கு முத்திரையை குத்தி அந்த வாக்குச்சீட்டினை ஓட்டுப்பெட்டியில் செலுத்தினர்.

மதியத்திற்கு மேல் வாக்குப்பதிவு சற்று விறு, விறுப்படைந்தது. வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடி மையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.

அறந்தாங்கி

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பட்டு ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்கு செலுத்தி சென்றனர்.

அன்னவாசல்

அன்னவாசல் ஒன்றியம் வெட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்த சவரிமுத்து என்பவர் உடல் நலக் குறைவால் இறந்து விட்டதால், அப்பதவியிடம் காலியாக இருந்தது. காலியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து சென்றனர். வெட்டுக்காடு ஊராட்சியில் மொத்தவாக்காளர்கள் 1,947, பதிவான வாக்குகள் 1,546. சதவீதம் 79.4 ஆகும். வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து வாக்கு பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலை புறக்கணித்த வாக்காளர்கள்

குன்றாண்டார் கோவில் ஒன்றிய மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உள்பட 5 ஊராட்சி மன்ற தலைவர் ஒரு ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்காளித்தனர். பரவயல் மற்றும் பணவயல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் 460 வாக்குகளில் 60 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. மீதமுள்ள 400 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யவில்லை.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதிகளுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தராததால் தேர்தலை புறக்கணிப்பதாக கூறினர். அவர்களை சமாதானம் செய்யும் நோக்கில் அனைத்து கட்சியினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் கடைசி நேரம் வரை அவர்கள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். மற்ற வாக்குச்சாவடிகளில் 50 முதல் 70 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகி இருந்தது. அந்த ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் 60 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அரிமளம்

அரிமளம் ஒன்றியம், நெடுங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 1978 வாக்காளர்களில், 1,499 வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு மையத்தில் பூத் சிலிப் கொடுக்கவில்லை என வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் குற்றம் சாட்டினார்கள். உடனடியாக பூத் சிலிப் வழங்கிய ஊராட்சி செயலாளர் செல்வி விடுவிக்கப்பட்டு அப்பணிக்கு மாற்றாக சத்துணவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டது. செங்கீரை ஊராட்சியில் 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 230.

Tags:    

மேலும் செய்திகள்