மத்திய அரசின் கிராம மேம்பாட்டு திட்டத்தை கண்காணிக்க கமிட்டி அமைக்க வேண்டும்- ஊராட்சி மன்ற தலைவர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய அரசின் கிராம மேம்பாட்டு திட்டத்தை கண்காணிக்க கமிட்டி அமைக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-04-20 19:15 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய அரசின் கிராம மேம்பாட்டு திட்டத்தை கண்காணிக்க கமிட்டி அமைக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறிதது மயிலாடுதுறை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் நேதாஜி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

உள்கட்டமைப்பு மேம்பாடு

பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 100 சதவீதம் மானியத்தில் மத்திய அரசால் 'பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டம்' எனப்படும் கிராம மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 2021-2022-ம் ஆண்டுக்காக 68 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு 212 பணிகள் ரூ.13.60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.

தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் குடிநீர், சுகாதாரம், கல்வி, ஆரோக்கியம், ஊட்டச்சத்து, சமூக பாதுகாப்பு, வீடு, சாலை, மின்சாரம், எரிபொருள், விவசாயம் திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த பல்வேறு திட்டங்களை தலா ரூ.20 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.

விஜிலன்ஸ் கமிட்டி

இந்த பணிகளை கண்காணிக்க கிராம அளவில் ஊராட்சி தலைவர் தலைமையில் 'வில்லேஜ் விஜிலன்ஸ்' என்ற பெயரில் கமிட்டியை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசின் விதிகளுக்கு முரணாக ஆளுங்கட்சியினர் பலனடையும் வகையில் விஜிலன்ஸ் கமிட்டியை உருவாக்காமல், ஒன்றிய அளவில் அரசு அதிகாரிகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே மத்திய அரசின் கிராம மேம்பாட்டு திட்டத்தை கண்காணிக்கும் வகையில் விஜிலென்ஸ் கமிட்டியை உடனே அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர், இது தொடர்பாக உரிய முறையில் ஆய்வு செய்து, அந்தந்த பகுதிகளில் கமிட்டி அமைத்து பணி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்