விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் நேற்று இரவில் இருந்து விடிய, விடிய ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.;

Update:2022-06-13 23:59 IST

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நேற்று இரவில் இருந்து விடிய, விடிய ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 8.20 மணியளவில் தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.55 மணியளவில் நிறைவடைகிறது. பவுர்ணமி இரவில் தொடங்கியதால் பக்தர்கள் 8 மணிக்கு மேலே கிரிவலம் செல்ல தொடங்கினர்.

கோடை விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதாலும், இரவில் பவுர்ணமி தொடங்கியதாலும் இரவு 10 மணி வரை கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது.

அதன்பின்னரே கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

பக்தர்கள் கிரிவலம்

முன்னதாக கிரிவலம் செல்வதற்காக வந்த பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கிரிவலத்தையொட்டி நேற்று இரவு திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் ஈசான்ய மைதானம், அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள நகராட்சி மைதானம், திருக்கோவிலூர் சாலையில் உள்ள மைதானம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இரவில் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர். இதனால் இரவில் கோவில் முன்பு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

மேலும் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்