கால்நடை ஆய்வாளர்கள் உண்ணாவிரதம்
தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில், திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது.;
தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில், திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை தலைவர் கண்ணன், தேனி மாவட்ட செயலாளர் ராஜன், கரூர் மாவட்ட செயலாளர் பாபு, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக்அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களை சேர்ந்த கால்நடை ஆய்வாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது கால்நடை ஆய்வாளர் பயிற்சியை போர்க்கால அடிப்படையில் தொடங்கி, கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 6-வது ஊதியக்குழுவின்படி கால்நடை ஆய்வாளர் நிலை-1 மற்றும் முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளருக்கு ஊதியம் வழங்க வேண்டும்.
அதேபோல் தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளருக்கு அடுத்தக்கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். மேலும் விடுபட்ட அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்ற 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.