கெலமங்கலத்தில்ரூ.48¼ லட்சத்தில் கால்நடை மருந்தக கட்டிடம்

கெலமங்கலத்தில் ரூ.48¼ லட்சத்தில் கால்நடை மருந்தக கட்டிடத்தை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார்.

Update: 2023-09-27 18:45 GMT

ராயக்கோட்டை

கட்டிடங்கள் திறப்பு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு பூமி பூஜை ஆகியன நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ், ராமச்சந்திரன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி கலந்து கொண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு பூமிபூஜை செய்தார்.

5 வழித்தடங்களில் பஸ்கள்

நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசும் போது கூறியதாவது:-

கெலமங்கலத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.48 லட்சத்து 35 ஆயிரத்தில் கால்நடை மருந்தக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. ரூ.82 லட்சத்து 26 ஆயிரத்தில் பாகலூர், உரிகம் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடங்கள், குடியிருப்புகள் மற்றும் உரிகம் செவிலியர் குடியிருப்பு கட்டிடம், மஞ்சு கொண்டப்பள்ளி கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் கெலமங்கலம் பஸ் நிலையத்தில் கெட்டூர், பூமாத்துக்குழி, பென்னிக்கல், பாத்தகோட்டா, தாசனபுரம் ஆகிய 5 வழித்தடங்களில் அரசு டவுன் பஸ்கள் இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளோம். தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் ரூ.1 கோடியே 80 ஆயிரத்தில் சிமெண்டு சாலை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது. தேன்கனிக்கோட்டை, கித்துவாய் நகர் பகுதியில் முழுநேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது.

7 கிராமங்கள்

கால்நடைகளை பராமரிக்கவும், தரமான சிகிச்சைகள் அளிக்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தொடங்கப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டிடம் மூலம் இப்பகுதியில் உள்ள கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவற்றிற்கு தேவையான மருந்துகளை பெற்று கொள்ளலாம்.

அதேபோல கெட்டூர், பூமாத்துக்குழி, பென்னக்கல், குக்கலப்பள்ளி, திருமலைக்கவுண்டன்கோட்டை, பாத்தகோட்டா மற்றும் தாசனபுரம் ஆகிய 7 கிராமங்களில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என பயன் பெறும் வகையில் பஸ் வழித்தடங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 376 அரிசி ஆலைகள் மட்டும் செயல்பாட்டில் இருந்தது. தற்போது முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில், 750 அரிசி ஆலைகள் மூலம் கருப்பு, பழுப்பு இல்லாத அரிசி அரவை செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.

நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் செல்வம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர் ஏகாம்பரம், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) குமரன், துணை பதிவாளர் குமார், அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் மோகன்குமார், கோட்ட மேலாளர் தமிழரசன், கிளை மேலாளர் ஜெகநாதன், புறநகர் கிளை மேலாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்