ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு..!

இந்த வழக்கு தொடர்பாக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Update: 2023-11-09 01:51 GMT

சென்னை,

தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், இந்த சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை. திறமைக்கான விளையாட்டான ரம்மியை, சூதாட்டத்துக்கான விளையாட்டாக கருத முடியாது என வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு இயற்றப்பட்டுள்ள இந்த சட்டம் செல்லுபடியாக கூடியது. பொது அமைதி, சுகாதாரம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக மட்டுமே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகள் காரணமாக வேலையில்லாத இளைஞர்கள், தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், போலீசார் என 32 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சட்டம் அவசியமாகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில், வாதங்கள் நிறைவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை ஐகோர்ட்டு இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளிக்க உள்ளது. இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்