8 பேரை கொன்று புதைத்த வழக்கில் 7-ந் தேதி தீர்ப்பு

திருச்சியில் 8 பேரை கொன்று புதைத்த வழக்கில் வருகிற 7-ந் தேதி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Update: 2023-07-31 18:56 GMT

திருச்சியில் 8 பேரை கொன்று புதைத்த வழக்கில் வருகிற 7-ந் தேதி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

8 பேர் கொலை

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரத்தை சேர்ந்தவர் சப்பாணி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு இவரது நண்பரான வேங்கூரை சேர்ந்த தங்கதுரை மற்றும் அதேபகுதியை சேர்ந்த தேக்கன், விஜய்விக்டர் உள்பட 8 பேரை பணம், நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்து புதைத்தார்.

திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சப்பாணியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சப்பாணி கொலை செய்தவர்களின் உடல்களை கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் உள்ள வயல்வெளியில் புதைத்ததாக போலீசாரிடம் கூறினார்.

7-ந் தேதி தீர்ப்பு

இதையடுத்து அவரை அழைத்து சென்ற போலீசார், கொலை செய்து புதைக்கப்பட்டவர்களின் உடல்களை தோண்டி எடுத்து அதே இடத்திலேயே மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட உடல்கள் மீண்டும் புதைக்கப்பட்டன. சப்பாணி ஒவ்வொருவரிடமும் நட்பாக பேசி அவர்களை தனியாக அழைத்து சென்று யாரும் பார்க்காத நேரத்தில் இந்த கொடூர கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.

அன்றைய காலகட்டத்தில் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் சப்பாணியை திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால் நீதிபதி கே.பாபு வழக்கின் தீர்ப்பை வருகிற 7-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்