வேப்பங்காடு முத்தாரம்மன் கோவில் கொடை விழா:பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு
வேப்பங்காடு முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்தினர்.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வேப்பங்காடு கீழ ராமசாமிபுரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெற்ற விழாவில், கடந்த 16-ந் தேதி முதல் 5 நாட்கள்சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கடந்த 21-ந் தேதி பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜையும், மாலை 4 மணிக்கு அன்னதானம், இரவு திருவிளக்கு பூஜையும் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து சாமி வீதிஉலா நடந்தது. வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் குவிந்திருந்து தரிசனம் செய்தனர். மறுநாள் காலையில் பால்குடம் எடுத்தல், பெண்கள் மஞ்சள் பெட்டி ஊர்வலத்தை தொடர்ந்து அம்மன் மஞ்சள் நீராடல் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை, சாமி வீதி உலாவும், பெண்கள் முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது.
நேற்று முன்தினம் காலை 11மணிக்கு முளைப்பாரி ஊர்வலமும், மாலையில் சாமி வீதி உலா, கஞ்சிவார்த்தலுக்கு பின்பு, இரவு கோவில் முன்பு பூக்குழி திறப்பும், இரவு 10மணிக்கு தேர்பவனியை தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
நேற்று அதிகாலை 5 மணிக்கு பூக்குழி இறங்குதல் நடைபெற்றது. இதில் விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி, வழிபாடு நடத்தினர்.. மாலை 4 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டுக்கு பிறகு, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.