குடும்பத்தினருடன் வியாபாரி தீக்குளிக்க முயற்சி

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16½ லட்சம் மோசடி செய்ததாக புகார் தெரிவித்து வியாபாரி ஒருவர் தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றார்.;

Update: 2022-06-06 18:05 GMT

திருக்கடையூர்;

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16½ லட்சம் மோசடி செய்ததாக புகார் தெரிவித்து வியாபாரி ஒருவர் தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றார்.திருக்கடையூரில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு

தீக்குளிக்க முயற்சி

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காமராஜ். இவர் வாடகை பாத்திரக்கடை நடத்தி வருகிறார். காமராஜ் தனது மனைவி தாமரைச்செல்வி, தாய் சுகுணா உள்பட 3 பேருடன் நேற்று திருக்கடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு வந்த அவர்கள் திடீரென தாங்கள் வைத்திருந்த மண்எண்ணைய்யை தங்களது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.இது குறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீக்குளிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் காமராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ரூ.16½ லட்சம் மோசடி

விசாரணையின்போது காமராஜ் தன்னிடம் கூட்டுறவு வங்கி ஊழியர் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 16 லட்சத்து 40 ஆயிரம் பெற்றுக்கொண்டதாகவும் ஆனால் வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி விட்டதுடன் பணத்தை திருப்பி தராமல் அலைக்கழிப்பதாகவும் இதனால் வேறு வழியின்றி தீக்குளிக்க வந்ததாகவும் கூறினார்.இதுகுறித்து பொறையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வியாபாரி தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்