வேலூர் புதிய பஸ்நிலையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்

வேலூர் புதிய பஸ் நிலையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று மாநகராட்சி மேயர் சுஜாதா அறிவுறுத்தினார்.

Update: 2023-02-06 17:20 GMT

மேயர், கமிஷனர் ஆய்வு

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் ரத்தினசாமி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு கட்டப்பட்டு வரும் புறக்காவல்நிலைய கட்டுமான பணிகள் மற்றும் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள குடிநீர், கழிப்பறைகள், இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் பஸ் நிலையம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்று பஸ்நிலைய வளாகம் முழுவதும் பார்வையிட்டனர். அப்போது ஆங்காங்கே கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்றவும், பயணிகள் அமருமிடத்தை தூய்மையாக பராமரிக்கவும் தூய்மை பணியாளர்களிடம் அறிவுறுத்தினர்.

ஆய்வின்போது மேயரிடம், அரசு விரைவு போக்குவரத்துக்கழக ஊழியர்கள், சேலம் மண்டல போக்குவரத்துக்கழக ஊழியர்கள் தனித்தனியாக கோரிக்கை மனு அளித்தனர். அதில் ''புதிய பஸ்நிலையத்தில் வேலம் மண்டல போக்குவரத்துக்கழகத்துக்கு அலுவலகம் அமைக்க தனி அறை ஒதுக்கப்படும் என்று கமிஷனர் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை அறை எதுவும் ஒதுக்கீடு செய்யாததால் திறந்தவெளியில் அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு எவ்வித பொருட்களையும் பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே எங்களுக்கு உடனடியாக அறை ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மேயர், விரைவில் அறை ஒதுக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.

தூய்மையாக பராமரிக்க வேண்டும்

ஆய்வுக்கு பின்னர் மேயர் சுஜாதா கூறுகையில், ''வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு 24 மணிநேரமும் பயணிகள் வந்து செல்கிறார்கள். எனவே பஸ்நிலையத்தை தூய்மையாக பராமரிக்கும்படியும், ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பஸ்நிலைய நுழைவுவாயிலை விரிவாக்கம் செய்வதற்காக கோவிலுக்கு சொந்தமான இடத்தை மாநகராட்சி வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பஸ்நிலையத்தில் உள்ள கடைகளை ஏலம் விடுவது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. வழக்கிற்கு விரைந்து தீர்வு காணப்பட்டு, அதன்பின்னர் ஏலம் விடப்படும். ஏலம் விடப்பட்ட பின்னர் பஸ்நிலைய வளாகத்தில் தரை, தள்ளுவண்டிக்கடைகள் வைப்பதற்கு அனுமதி கிடையாது. ஆட்டோக்களை தாறுமாறாக நிறுத்த அனுமதி இல்லை'' என்றார்.

ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி கமிஷனர் செந்தில்குமரன், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்