வேளாங்கண்ணி மாதா பேராலய பெரிய தேர்பவனி

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி இன்று(புதன்கிழமை) பெரிய தேர்பவனி நடக்கிறது.

Update: 2022-09-06 17:39 GMT

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி இன்று(புதன்கிழமை) பெரிய தேர்பவனி நடக்கிறது.

வேளாங்கண்ணி மாதா பேராலயம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. ஆண்டுதோறும் மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாநாட்களில் தினமும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலியும், இரவு 8 மணிக்கு சிறிய தேர்பவனியும் நடந்து வருகிறது.

இன்று பெரிய தேர்பவனி

விழாவின் முக்கிய நிதழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று(புதன்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் குவிந்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

விழாவையொட்டி பொது சுகாதார அமைப்பின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளரும் விழாவின் சுகாதார பொறுப்பு அலுவலருமான சுப்பிரமணியன் கூறியதாவது:-

10 இடங்களில் மருத்துவ முகாம்

நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கண்காணிப்பில் 30 டாக்டர்கள், 10 மருந்தளூனர்கள், 30 செவிலியர்கள், 87 சுகாதார ஆய்வாளர்கள், 4 வட்டார சுகாதார ஆய்வாளர்கள், 2 மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர்கள், 70 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வேளாங்கண்ணியில் 10 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்தகுமார் தலைமையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இ.சி.ஜி., நாய்க்கடி மருந்து, பாம்பு கடி மருந்து, உயிர் காக்கும் மருந்து என வசதிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

20 லட்சம் லிட்டர் குடிநீர்

தினமும் வேளாங்கண்ணியில் 4 டிராக்டர்களில் 485 துப்புரவு பணியாளர்கள் கொண்டு 6 முதல் 7 டன் வரை குப்பைகள் அகற்றப்படுகின்றன. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

வேளாங்கண்ணியில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றில் குளோரின் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது.வெளியூர்களில் இருந்து ெரயிலில் வரும் பயணிகளை தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு காய்ச்சல் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் 12 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

கூட்டுத்திருப்பலி

நாளை(வியாழக்கிழமை) தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலியும். மாலை கொடி இறக்கமும் நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து மாதா மன்றாட்டு, திவ்யநற்கருணை ஆசிர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

விழாவையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடலோர காவல் படை போலீசாரும் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்