போதிய ஊழியர்கள் இல்லாததால் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
கூடலூர்-கர்நாடக எல்லையில் வாகனங்களுக்கு பசுமை வரி வசூலிக்கப்படுகிறது. அங்கு போதிய ஊழியர்கள் நியமிக்கப்படாததால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைகின்றனர்.
கூடலூர்,
கூடலூர்-கர்நாடக எல்லையில் வாகனங்களுக்கு பசுமை வரி வசூலிக்கப்படுகிறது. அங்கு போதிய ஊழியர்கள் நியமிக்கப்படாததால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைகின்றனர்.
பசுமை வரி வசூலிப்பு
நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் மிகுந்த மலைப்பிரதேசமாக உள்ளது. சிறந்த கோடை வாசஸ்தலமாக உள்ளதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் வருவதால் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்ட வாகன ஓட்டிகளிடம் பசுமை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடகா எல்லையான கக்கநல்லாவில் வெளிமாநில வாகன ஓட்டிகளிடம் பசுமை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கர்நாடகா பகுதியில் பசுமை வரி வசூலிக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா அரசு மற்றும் வனத்துறை சார்பில் நீலகிரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு ரூ.20 பசுமை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
நீண்ட நேரம் காத்திருப்பு
இதனால் தமிழக-கர்நாடக எல்லையில் வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கிறது. இதுதவிர சீசன் என்பதால் கர்நாடகா-கேரளா மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப கர்நாடகாவில் பசுமை வரி வசூலிப்பதற்கு போதிய ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.
இதனால் தொலை தூரங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வெகு நேரம் காத்து நின்று எல்லையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, வனப்பகுதிக்குள் வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும், விதிமுறைகளை மீறினால் ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என பசுமை வரி ரூ.20 செலுத்தியதற்கான ரசீதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், வாகன போக்குவரத்துக்கு ஏற்ப பசுமை வரி வசூலிக்க போதிய ஊழியர்கள் நியமிக்கப்பட வில்லை. எனவே, சீசன் காலங்களில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.