அதிக பாரம் ஏற்றினால் வாகனங்களின் உரிமம் ரத்து

தரமற்ற சாலைகளை போடும் ஒப்பந்ததாரர்களை நிராகரிக்க வேண்டும் என்றும் கனிம வளங்களை அதிக பாரத்தில் ஏற்றி செல்லும் வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் ஆய்வு கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Update: 2023-05-24 19:59 GMT

நாகர்கோவில்,

தரமற்ற சாலைகளை போடும் ஒப்பந்ததாரர்களை நிராகரிக்க வேண்டும் என்றும் கனிம வளங்களை அதிக பாரத்தில் ஏற்றி செல்லும் வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் ஆய்வு கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சாலை பாதுகாப்பு கூட்டம்

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப்யாதவ் தலைமை தாங்கினார். தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு வருவாய் அதிகாரி ரேவதி வரவேற்று பேசினார். கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையேட்டை வெளியிட, அதனை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தொடா்ந்து திறமையாக செயல்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் கருத்து

கூட்டத்தில் பஸ்- ஆட்டோ உரிமையாளர்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி- கல்லூரி தாளாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் பெரும்பாலும் குறுகிய சாலைகள் உள்ளன. அவற்றை விரிவாக்கம் செய்ய வேண்டும். சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும். புதிதாக சாலைகள் போடப்பட்ட பிறகு கேபிள் அமைக்க பள்ளம் தோண்டப்படுகிறது. பின்னர் அதனை சரியாக மூடாமல் குண்டும், குழியுமாக உள்ளது. அவற்றை உடனே செப்பனிட வேண்டும். மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

3 ஆண்டுக்கு ஒரு முறை...

கூட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், 'குமரி மாவட்டத்தில் அதிகபாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரியில் ஆண்டுக்கு 2 பருவமழை பெய்கிறது. எனவே ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இருப்பதுபோல 3 ஆண்டுக்கு ஒரு முறை சாலைகள் செப்பனிட வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை விரிவு செய்ய வேண்டும்', என்றார்.

கூட்டத்தில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. கூறுகையில், 'நாகர்கோவில்- களியக்காவிளை சாலையில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி உள்ளதால், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். திங்கள்சந்தை- இரணியல் சாலையை வரிவுப்படுத்த வேண்டும். தக்கலை, குழித்துறை அரசு ஆஸ்பத்திரிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்றார்.

காங்கிரீட் சாலைகளாக

தொடர்ந்து மாநகர மேயர் மகேஷ் கூறுகையில், 'நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை போக்க செட்டிகுளத்தில் ரவுண்டான அமைக்க வேண்டும். இருளப்பபுரம் மற்றும் பார்வதிபுரம் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தை மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கித்தர வேண்டும்' என்றார்.

பின்னர் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், 'குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிகள் கிடப்பில் இருந்ததால், மத்திய அரசுடன் பேசி ரூ.1,440 கோடி நிதி பெற்று பணிகள் நடைபெற உள்ளது. தண்ணீர் பாயும் சாலைகளை காங்கிரீட் சாலைகளாக மாற்றியமைக்க வேண்டும்' என்றார்.

அமைச்சர் எ.வ.வேலு

கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும் போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தரமற்ற சாலைகளை போடும் ஒப்பந்ததாரர்களை நிராகரிக்க வேண்டும். நான் குமரி மாவட்டத்திற்கு வந்தபோது தோவாளை பகுதிகளில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தேன். அங்கு சாலைகள் தரமாக போடப்பட்டுள்ளன.

சாலைகளில் தடுப்பு வேலி அமைப்பதை உறுதி செய்ய வேண்டும். வேகத்தடைகள் விதிமுறைகளுக்கு உட்பட்ட உயரத்திற்குள் இருக்க வேண்டும்.

கட்டாயம் ஹெல்மெட்...

மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு இருசக்கர வாகனங்களில் வரும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தகுதியான நபர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும். கார்களில் சீட் பெல்ட் அணிவதையும், ஏர்பேக் உள்ளதா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்