தேவகோட்டையில் வாகன சோதனை: செல்போனை போலீசார் பறிமுதல் செய்ததால் வாலிபர் தற்கொலை- வெளிநாடு செல்ல இருந்த நிலையில் சோகம்
வாகன சோதனையில் செல்போனை போலீசார் பறிமுதல் செய்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது..
தேவகோட்டை
வாகன சோதனையில் செல்போனை போலீசார் பறிமுதல் செய்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது..
செல்போன் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருகப்பூரார் தெருவை சேர்ந்தவர் ஜேசுராஜ். இவருடைய மனைவி ராக்கம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள்.
இதில் 2-வது மகன் அரவிந்த் (வயது 23). இவர் சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். பின்னர் சொந்த ஊரில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் தேவகோட்டையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அரவிந்த் வந்துள்ளார். அவரை போலீசார் மறித்து விசாரித்தனா்.
அரவிந்த் மது போதையில் இருந்ததாக கூறி, அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகவும், அரவிந்தின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அரவிந்தின் தந்தை ஜேசுராஜ் அங்கு வந்து போலீசாரிடம் பேசி மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றுவிட்டாராம்.
அதே நேரத்தில் அரவிந்த் செல்போனை போலீசார் திருப்பி கொடுக்கவில்லை என்றும், மறுநாள் வந்து அபராத தொகையை செலுத்திவிட்டு வாங்கிச் செல்லுமாறு கூறியதாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில், வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு தனி அறையில் இருந்த அரவிந்த், அங்கு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே அந்த அறைக்கு ஜேசுராஜ், மகனை தேடிவந்தபோது, அரவிந்த் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து தேவகோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது..
போலீசார் அங்கு சென்று அரவிந்தின் உடலை மீட்டு பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகன சோதனையின்போது, போலீசார் செல்போனை பறித்துக்கொண்டதால்தான் மனவருத்தம் அடைந்த அரவிந்த் தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர் இன்னும் சில வாரங்களில் மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு செல்ல தயாராகி வந்த நிலையில், தற்கொலை செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்.