நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம்
தர்மபுரி மாவட்டத்தில் காசநோய் பாதிப்பை கண்டறிய நடமாடும் நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே வாகன சேவையை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் காசநோய் பாதிப்பை கண்டறிய நடமாடும் நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே வாகன சேவையை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம்
காசநோய் இல்லா தமிழ்நாடு-2025 என்ற இலக்கினை அடைய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக தமிழக முதல்- அமைச்சரால் டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்தப்பட்ட 23 நடமாடும் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இவற்றில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டிலான டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் தர்மபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சேவையை தர்மபுரியில் கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் காசநோய் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில், காசநோய் கண்டறிவதற்கு இந்த வாகனம் பயன்படுத்தப்படும். இதில் பொருத்தப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மின்வசதி இல்லாத இடங்களில் கூட ஜெனரேட்டர் உதவியுடன் இயங்கும். இந்த வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்ரே அறை, எக்ஸ்ரேக்களை உடனடியாக சரிபார்க்கும் கணினி பொருத்தப்பட்ட அறை ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது. காச நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நோய் தடுப்பு முறைகளை தெரிவிப்பதற்கு வண்ண தொலைக்காட்சி திரை, முகாம்களின் போது பொதுமக்கள் வசதிக்காக நிழற்குடை ஆகியவை இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
கண்காணிப்பு சேவை
இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி ஒரு மணி நேரத்தில் 10 எக்ஸ்ரேக்கள் எடுக்கும் திறன் கொண்டது. காசநோய் உள்ளவர்களை கண்டறிய, அவர்களுக்கு சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே போன்றவற்றை இலவசமாக மேற்கொண்டு காசநோய் உள்ளதா? என்பதை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சைகள், மருந்துகள், ரூ.500 உதவித்தொகை மற்றும் தொடர் கண்காணிப்பு சேவை வழங்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) ராஜேஷ்கண்ணா, காசநோய் சிகிச்சை பிரிவு துணை இயக்குனர் ராஜ்குமார், குடும்ப நல துணை இயக்குனர் மலர்விழி, தொழுநோய் சிகிச்சை பிரிவு துணை இயக்குனர் புவனேஸ்வரி உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.