சத்துணவு திட்டத்துக்கு இலவச காய்கறி வழங்கும் திட்டம் தொடக்கம்
சத்துணவு திட்டத்துக்கு இலவச காய்கறி வழங்கும் திட்டம் தொடங்கியது.;
வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வித்தியானந்தன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பக்கிரிசாமி வரவேற்றார். கருப்பம்புலம் ஊராட்சி உள்ள பழத்தோட்டத்தில் ஊராட்சியின் சார்பாக காய்கறிகள் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த காய்கறிகளை அங்குள்ள பள்ளிகளில் சத்துணவு திட்டத்திற்கு இலவசமாக வழங்க கூட்டத்தில் முடிவு செய்யபட்டது. மேலும் கருப்பம்புலத்தில் உள்ள பி.வி.தேவர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கருப்பம்புலம் வடகாடு, தெற்கு காடு, மேலக்காடு ஆகிய இடங்களில் உள்ள தொடக்கப்பள்ளி உள்பட 5 பள்ளிகளுக்கும், 2 அங்கன்வாடி மையங்களுக்கும் நாள்தோறும் ஊராட்சி மன்றத்தின் சார்பாக காய்கறிகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் இலவச காய்கறிகளை பள்ளிகளுக்கு வழங்கினார். அதை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகநாதன் பெற்றுக்கொண்டார். இந்த திட்டம் மூலம் 500 மாணவ, மாணவிகள் நாள்தோறும் பயன்பெறுவர்கள் என ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் கூறினார். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் கவிமணி நன்றி கூறினார்.