அதங்குடி பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள்

கூத்தாநல்லூர் அருகே உள்ள அதங்குடி பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-24 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள அதங்குடி பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு

கூத்தாநல்லூர் அருகே உள்ளது அதங்குடி பாசன வாய்க்கால். கோரையாற்றில் இருந்து வரும் தண்ணீரை இந்த பாசன வாய்க்கால் வழியாக கொண்டு சென்று அப்பகுதியில் உள்ள சுமார் 250 ஏக்கர் வயல்களில் நெல், உளுந்து, பயறு போன்ற பயிர்களை அப்பகுதி விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த பாசன வாய்க்காலின் நடு மையத்தில் கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து வாய்க்காலை ஆக்கிரமித்து உள்ளன. சில இடங்களில் பாசன வாய்க்கால் மேடான பகுதியாகவும் மாறி உள்ளது.

தண்ணீர் செல்ல முடியாத நிலை

இதனால் கடந்த 3 ஆண்டுகளாக பாசன வாய்க்கால் வழியாக முறையாக கோரையாற்றில் இருந்து வரும் தண்ணீர் தடைப்பட்டு போவதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். இதனால், வயல்களுக்கு போதுமான அளவில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, பயிர்கள் காய்ந்து போகும் நிலை ஏற்படுகிறது.

அப்போது பயிர்களை பாதுகாக்க பம்புசெட் வைத்து வயல்களில் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதுடன், மகசூல் பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது.

செடி, கொடிகளை அகற்றி

எனவே இனிவரும் காலங்களில் தங்கு தடையின்றி போதுமான அளவில் பாசன வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக, பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும். மேலும் இந்த பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்