விழுப்புரத்தில்பழுதடைந்த கட்டிடத்தால் அல்லல்படும் காய்கறி வியாபாரிகள்: புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை
விழுப்புரத்தில் காய்கறி மார்க்கெட் கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளதால் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் எம்.ஜி.சாலையில் மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த காய்கறி மார்க்கெட் கட்டிடம் கடந்த 1968-ம் ஆண்டில் நகராட்சி மூலம் காமராஜ் காய்கறி சந்தை என்ற பெயரில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் 34 வியாபாரிகளுடன் தொடங்கப்பட்ட இந்த காய்கறி மார்க்கெட்டில் படிப்படியாக மொத்த காய்கறி வியாபாரிகள், சில்லரை காய்கறி வியாபாரிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கடை வைத்து வியாபாரம் செய்யத்தொடங்கினர்.
இதனால் இந்த காய்கறி மார்க்கெட் மக்கள் கூட்டத்துடன் எப்போதுமே பரபரப்பாக இயங்கும்.
இடநெருக்கடியில்
இந்த காய்கறி மார்க்கெட்டில் குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாதது ஒருபுறம் இருந்தாலும், போதிய இடவசதி இல்லாததால் பக்கத்து தெருவான பாகர்ஷா வீதியில் உள்ள வீடுகள், கடைகளை வாடகைக்கு எடுத்து காய்கறி வியாபாரம் செய்தனர். இருப்பினும் போதிய இடவசதியின்றி பல வியாபாரிகள், பாகர்ஷா வீதியிலேயே சாலையோரமாக காய்கறிகளை கொட்டி வைத்து வியாபாரம் செய்தனர்.
காய்கறி மார்க்கெட்டுக்கு மாற்று இடம் வழங்கக்கோரியும் அல்லது மார்க்கெட்டையே விரிவாக்கம் செய்து கூடுதல் கட்டிடம் கட்டித்தரும்படியும் நகராட்சி நிர்வாகத்திடம் காய்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரைக்கும் நடவடிக்கை இல்லை.
கிடப்பில் போடப்பட்ட திட்டம்
மேலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அப்போதைய அமைச்சராக இருந்த சி.வி.சண்முகத்திடம் மாற்று இடம் வழங்கக்கோரி வியாபாரிகள் முறையிட்டதன்பேரில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் நகராட்சி திடல் அருகே காய்கறி மார்க்கெட் அமைப்பது குறித்து இடம் தேர்வு செய்யப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதற்கிடையே எம்.ஜி.சாலை காய்கறி மார்க்கெட் கட்டிடம் பராமரிப்பின்றி மிகவும் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் இங்கு கடை வைத்திருந்த சில வியாபாரிகள், ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே தற்காலிகமாக கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.
ஒருசில வியாபாரிகள் எம்.ஜி. சாலை காய்கறி மார்க்கெட்டில் கடையை நடத்தி வந்தாலும், காய்கறிகளை பாதுகாத்து வைக்க போதிய இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மழைக்காலங்களின்போது அவை தண்ணீரில் நனைந்து வீணாகுவதால் காய்கறிகளை கீழே கொட்டும் நிலைமைக்கு வியாபாரிகள் தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
புதிய கட்டிடம்
எனவே இந்த காய்கறி மார்க்கெட்டை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அதே இடத்தில் போதிய இடவசதி, அடிப்படை வசதிகள் மற்றும் கூடுதல் கடைகளுடன் புதிய மார்க்கெட் கட்டிடம் கட்டித்தர வேண்டும் அல்லது மாற்று இடம் தேர்வு செய்து புதிய காய்கறி மார்க்கெட் கட்டித்தர வேண்டுமென காய்கறி வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
1989 முதல் போராடுகிறோம்
இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:-
விழுப்புரம் நகர அனைத்து காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ஜோதிராம்:-
விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள காய்கறி மார்க்கெட்டை சீரமைத்து புதிய கட்டிடம் கட்டிக்கொடுத்து அங்கு சில்லரை வியாபாரிகளை அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தால் அவர்கள் சாலைக்கு வந்து வியாபாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்படாது. மொத்த வியாபார கடைகளுக்கென்று தனி மார்க்கெட் அமைத்து தரக்கோரி கடந்த 1989-ல் இருந்து போராடி வருகிறோம். இதற்காக எத்தனையோ முறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
தற்போது இயங்கி வரும் ஜானகிபுரம் மொத்த காய்கறி மார்க்கெட் பகுதியில் இருந்து முத்தாம்பாளையம் புறவழிச்சாலை வரையுள்ள இடைப்பட்ட பகுதியில் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு மொத்த காய்கறி கடைகளுக்கான மார்க்கெட் கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்கு மொத்த மார்க்கெட் அமைந்தால் வெளியூர் வியாபாரிகளும் எந்தவித சிரமமும் இன்றி எளிதாக வந்துசெல்ல வசதியாக இருக்கும். இதன் மூலம் அரசுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் நல்ல வருவாயாக இருக்கும்.
பாதுகாப்பு இல்லை
விழுப்புரம் பாகர்ஷா வீதியில் காய்கறி வியாபாரம் செய்யும் பத்மநாபன்:-
நான் கடந்த 1994-ல் இருந்து இங்கு காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். கொரோனா ஊரடங்கு காலத்தின்போது இங்கிருந்த மொத்த காய்கறி கடைகள் ஜானகிபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த மார்க்கெட் பராமரிப்பின்றி காணப்படுகிறது. கஞ்சா அடிக்கும் இடமாகவும், மதுபானம் அருந்தும் இடமாகவும் மாறியுள்ளது. இதனால் பகலில் வியாபாரம் முடிந்த பின்னர் இரவு நேரங்களில் இந்த மார்க்கெட்டுக்குள் பொருட்களை பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. அடிக்கடி காய்கறிகள் காணாமல் போய்விடுகிறது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த மாவட்ட கலெக்டர், இந்த மார்க்கெட்டுக்கு நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது புதிய மார்க்கெட் கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் மாதங்கள் பல உருண்டோடி விட்டபோதிலும் இதுநாள் வரையிலும் புதிய மார்க்கெட் கட்டித்தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இந்த காய்கறி மார்க்கெட் கட்டிடத்தை அடிப்படை வசதிகளுடனும், பாதுகாப்பு வசதிகளுடனும் கூடிய புதிய கட்டிடமாக கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.