சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் பேரூராட்சி காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 55). இவர் சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையத்தில் காய்கறி கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இவர் நண்பர் சங்கருடன் அக்கியம்பட்டி அருகே மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த வேகத்தடையில் எதிர்பாராத விதமாக மோதி இருவரும் தவறி விழுந்தனர். இதில் மணி பலத்த காயமடைந்தார். சங்கர் காயங்களுடன் உயிர்தப்பினார். அதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் மணி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். அந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மணிக்கு செங்கம்மாள் (45) என்ற மனைவி உள்ளார்.