உடுமலை உழவர் சந்தையில் கடந்த ஜனவரி மாதத்தில் ரூ. 2 கோடியே 24 லட்சத்துக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை
உடுமலை உழவர் சந்தையில் கடந்த ஜனவரி மாதத்தில் ரூ. 2 கோடியே 24 லட்சத்துக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை
உடுமலை
உடுமலை உழவர் சந்தையில் கடந்த ஜனவரி மாதத்தில் ரூ. 2 கோடியே 24 லட்சத்துக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை ஆகியுள்ளது.
வேளாண் விற்பனைத்துறை
விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களே நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனைத்துறை மூலம் உழவர் சந்தைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் உடனுக்குடன் பொதுமக்களுக்கு சென்று சேர்வதால் ஆர்வத்துடன் உழவர் சந்தைகளை தேடி வருகின்றனர்.
அந்த வகையில் உடுமலை கபூர்கான் வீதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். அதிகாலையில் செயல்படத் தொடங்கும் உழவர் சந்தை பலருக்கு நடை பயிற்சியின் போது காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை வாங்க உதவும் மையமாக உள்ளது.
90 ஆயிரம் பேர் வருகை
கடந்த ஜனவரி மாதத்தில் உடுமலை உழவர் சந்தைக்கு 2 ஆயிரத்து 374 விவசாயிகள் கொண்டு வந்த 8 லட்சத்து 36 ஆயிரத்து 955 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களை 90 ஆயிரத்து 91 பொதுமக்கள் வாங்கியுள்ளனர். அந்தவகையில் ஒரு நாளைக்கு சராசரியாக 3 ஆயிரம் பொதுமக்கள் உழவர் சந்தையை பயன்படுத்தி வருகின்றனர். விற்பனையான மொத்த காய்கறிகள் மற்றும் பழங்களின் மதிப்பு ரூ. 2 கோடியே 24 லட்சத்து 36 ஆயிரத்து 825 ஆகும். இது முந்தைய டிசம்பர் மாதத்தை விட ரூ. 33 லட்சத்து 98 ஆயிரத்து 70 அதிகம் ஆகும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 2 ஆயிரத்து 215 விவசாயிகள் கொண்டு வந்திருந்த ரூ. 1 கோடியே 90 லட்சத்து 38 ஆயிரத்து 755 மதிப்பிலான 7 லட்சத்து 57 ஆயிரத்து 905 கிலோ காய்கறிகள் விற்பனை ஆகியிருந்தது. அதனை 84 ஆயிரத்து 215 பேர் வாங்கி பயனடைந்திருந்தனர். கடந்த மாதத்தில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதுடன், பொதுமக்களின் வருகையும் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
காய்கறி விலை
நேற்றைய நிலவரப்படி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ. 24-க்கும், கத்தரிக்காய் ரூ. 18- க்கும், புடலங்காய் ரூ. 20, பீர்க்கங்காய் ரூ.35, பாகற்காய் ரூ.40, முள்ளங்கி ரூ.18, மிளகாய் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.26, முருங்கைக்காய் ரூ. 70 என்ற விலையில் விற்பனையானது. வெண்டைக்காய் வரத்து குறைவாக இருந்த நிலையில் ஒரு கிலோ ரூ. 40 முதல் அதிகபட்சமாக ரூ. 55 வரை விற்பனையானது. உடுமலை உழவர் சந்தைக்கு பொதுமக்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வாகன நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.