திருவாரூரில் காய்கறி விலை கடும் உயர்வு

திருவாரூரில் காய்கறிகள் விலை கடும் உயர்ந்து காணப்பட்டது.

Update: 2023-01-14 18:45 GMT

திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.குறிப்பாக திருச்சி, கும்பகோணம், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படும். இன்று (ஞாயிற்றுக்கிழமை)பொங்கல் பண்டிகை என்பதால் காய்கறிகள் விற்பனை அதிக அளவில் நடந்தது.காய்கறிகள் விளைச்சல் குறைவாக உள்ளதாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் நேற்று விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.திருவாரூர் காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோ கணக்கில்) வருமாறு:- கத்தரிக்காய் ரூ.50 முதல் ரூ.90 வரை, பீன்ஸ் ரூ.50, அவரைக்காய் ரூ.60, கேரட் ரூ.38, பீட்ரூட் ரூ.48, பச்சை மிளகாய் ரூ.48, காலிபிளவர் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.70 முதல் ரூ.90 வரை, பல்லாரி ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.26, பரங்கிக்காய் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதே போல் பொங்கல் கலப்பு காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ரூ.65-க்கு விற்ற சேப்பகிழங்கு ரூ.85-க்கும், ரூ.70-க்கு விற்ற சிறுகிழங்கு ரூ.80-க்கும், ரூ.20-க்கு விற்ற கருணை கிழங்கு ரூ.28-க்கும் விற்பனையானது. பட்டாணி, மொச்சை, பூசணி விலையில் சிறிதளவு மாற்றம் காணப்பட்டது.இது குறித்து காய்கறி வியாபாரிகள் கூறியதாவது:- திருவாரூரில் காய்கறி விலை கடந்த சில நாட்களாக குறைந்திருந்த நிலையில் நேற்று காய்கறிகளின் விலை சற்று அதிகளவில் காணப்பட்டது.2 நாட்களாக கடைவீதியில் பொதுமக்கள் வராமல் விற்பனை மந்த நிலையில் இருந்தது. இன்று பொங்கல் கொண்டாடுவதையொட்டி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்க அதிகளவில் வந்திருந்தனர். 2நாட்கள் விற்பனை இல்லாமல் இருந்த நிலையில் இன்று(நேற்று) வியாபாரம் அதிக அளவில் நடைபெற்று சற்று மகிழ்ச்சி அளிக்கிறது. என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்