'குற்றம் செய்யாமல் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தேன்'-வீரப்பனின் கூட்டாளி ஆண்டியப்பன் பேட்டி

‘குற்றம் செய்யாமல் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தேன்’ என்று கோவை சிறையில் இருந்து விடுதலையான வீரப்பனின் கூட்டாளி ஆண்டியப்பன் தெரிவித்தார்.

Update: 2022-11-14 20:05 GMT

வீரப்பன் கூட்டாளி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகர் சிதம்பரம் என்பவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு குண்டேரி பள்ளம் என்ற இடத்தில் 1987-ம் ஆண்டு சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு வீரப்பனின் கூட்டாளிகளான ஆண்டியப்பன் மற்றும் பெருமாள் ஆகியோர் கர்நாடக கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இதனையடுத்து 1990-ம் ஆண்டு முதல் மாதையன், ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் 3 பேருக்கும் 1997-ம் ஆண்டு ஈரோடு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. இதனால் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, கடந்த ஆண்டு வயது மூப்பு மற்றும் உடல்நிலை பாதிப்பால் வீரப்பனின் அண்ணன் மாதையன் சிறையிலேயே உயிரிழந்துவிட்டார்.

சிறையில் இருந்து விடுதலை

இந்த நிலையில், அண்ணா பிறந்தநாளையொட்டி சிறையில் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது.

இதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து 30 ஆண்டுகள் சிறையில் இருந்த வீரப்பனின் கூட்டாளிகள் ஆண்டியப்பன் மற்றும் பெருமாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்கள் அந்தந்த மாவட்ட நன்னடத்தை அலுவலரிடம் 3 ஆண்டுகளுக்கு மாதம் ஒருமுறை நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.

வீரப்பனின் கூட்டாளியான ஆண்டியப்பனின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கோபிநத்தம் ஆகும். இதனால் அவர் நேற்று ஓமலூரில் உள்ள நன்னடத்தை அலுவலர் கோபிசங்கர் முன்னிலையில் ஆஜராகி கையெழுத்துபோட்டார்.

குற்றம் செய்யாமல் சிறைவாசம்

இதுகுறித்து ஆண்டியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வீரப்பன் உறவினர் மற்றும் அவருடன் இருந்தேன் என்பதற்காக கொலை குற்றம் செய்யாத என்னை குற்றவாளி எனக்கூறி சிறையில் அடைத்தனர். 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தேன். திருமணம் ஆகி 6 மாத கைக்குழந்தையாக எனது மகன் இருக்கும்போது நான் சிறைக்கு சென்றேன். தற்போது அவனுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் பிறந்துவிட்டது. தற்போது தான் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறேன். இதனால் உறவினர்கள் யார்? யார்? என்று தெரியவில்லை.

எனது வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறையிலேயே அனுபவித்துவிட்டேன். இனி என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசு உதவி செய்தால் இனி இருக்கும் வாழ்க்கையை வாழ்ந்துவிடுவேன். சிறையில் இருக்கும்போது எனது குடும்பத்தை சகோதரர் தான் கவனித்துக்கொண்டார். நான் குற்றம் செய்யாமல் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தது வேதனையானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்