பச்சை நிறத்திற்கு மாறிய வீராணம் ஏரி - பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சி
வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் பச்சை நிறத்தில் தோன்றுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.;
கடலூர்,
சென்னையில் தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, மேட்டூரில் குறைவான அளவு தண்ணீர் இருந்தாலும் வேறு வழியின்றி அந்த நீரை வீராணம் ஏரி வழியாக சென்னைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, கீழணை வழியாக, கடந்த 25-ந்தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தடைந்தது.
இந்நிலையில் ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. தண்ணீர் வரும் வழியில் சாயக்கழிவுகள் கலந்து தண்ணீரின் நிறம் மாறியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏரி தண்ணீரை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறுகையில், ஏரி முற்றிலும் வரண்டு, குறிப்பிட்ட இடத்தில் குட்டையாக தேங்கியிருந்த தண்ணீரில் பாசி படர்ந்திருந்ததன் காரணமாக ஏரி தண்ணீர் பச்சை நிறமாக காட்சியளிக்கலாம் எனவும், இது குறித்து விரிவாக ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.