வீரன் அழகு முத்துகோன் பிறந்தநாள் விழா:வாகனங்களில் பங்கேற்போருக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

வீரன் அழகு முத்துகோன் பிறந்தநாள் விழாவில் வாகனங்களில் பங்கேற்போருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-02 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ள வீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழாவில் வாகனங்களில் சென்று பங்கேற்போருக்கு கட்டுப்பாடுகள் விதித்து நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டம்

வீரன் அழகுமுத்துக் கோன் பிறந்த நாள் விழா வருகிற 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு நாலாட்டின்புதூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அழகுமுத்துக்கோன் நலச்சங்க நிர்வாகிகள், வாரிசுதாரர்கள், தமிழக யாதவ இயக்க கூட்டமைப்பினர் மற்றும் விழா பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமை தாங்கினார். நாலாட்டின்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர்ஜஸ்டீன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் வண்டானம் கருப்பசாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் யாதவ வர்த்தக சங்கத்தினர், சாத்தூர் யாதவ சங்க நிர்வாகிகள், அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள், தமிழ்நாடு யாதவ மகாசபை நிர்வாகிகள், கருடன் எழுச்சி இயக்க நிர்வாகிகள், தமிழக யாதவ பாதுகாப்பு பேரவையினர், வீரன் அழகுமுத்துக்கோனின் வாரிசு தாரர்களான ராஜேஸ்வரி, வனஜா, ராமகிருஷ்ணா உள்பட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போலீஸ் அனுமதி

கூட்டத்தில், விழா கொண்டாடப்படும் கிராமங்களில் பொறுப்பாளர்கள் போலீசாரிடம் முன் அனுமதி பெற வேண்டும். விழா சம்பந்தமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதற்கு மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும், அனுமதி பெறாமல் டிஜிட்டல் பேனர்கள் வைப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள்

வருகிற 11-ந்தேதி மாலை 5 மணிக்குள் அனுமதியுடன் வைக்கப்பட்ட பேனர்களை அவரவர்களே அகற்றிவிட வேண்டும். மோட்டார் சைக்கிளில் வருவதற்கும், ஜோதி எடுத்துச் செல்வதற்கும் அனுமதி கிடையாது. விழாவுக்கு வரும் வாகனங்கள் நெல்லை - மதுரை தேசிய நெடுஞ்சாலை கட்டாலங்குளம் விலக்கு சரவணபவன் ஓட்டல் அருகில் உள்ள நுழைவு வாயில் வழியாக கட்டலாங்குளம் செல்ல வேண்டும்.

விழா முடிந்து வெளியே செல்லும் போது, செட்டிக்குறிச்சி ஜங்ஷனில் இருந்து நெல்லை, மதுரை, கோவில்பட்டி மார்க்கமாக செல்பவர்கள் தெற்கு நோக்கி கயத்தாறு வழியாகவும், சங்கரன்கோவில், தென்காசி மார்க்கமாக செல்பவர்கள் மேற்கு நோக்கி கழுகுமலை வழியாகவும் செல்ல வேண்டும். விழாவில் கலந்து கொள்ள வருபவர்கள் 3 வாகனங்களுக்கு மேல் தொடர்ச்சியாக செல்லக் கூடாது. மேலும் உரிய அனுமதிச் சீட்டு மற்றும் வாகனங்களின் ஆவணங்களுடன் வர வேண்டும். வாகனங்களின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டோ, தொங்கிக் கொண்டோ வரக் கூடாது. சொந்த வாகனங்களில் வருபவர்கள் மேற்கூரையில் உள்ள கேரியர்களை அகற்றிவிட்டு விழாவிற்கு வர வேண்டும். விழாவிற்கு வரும் வாகனங்கள் போலீஸ் அனுமதித்துள்ள வழித்தடத்தில் தான் சென்று, திரும்ப வேண்டும். விழாவின் போது பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. புதிதாக எந்த நிகழ்ச்சிக்கும் நடத்த அனுமதி கிடையாது. நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ குழாய் பயன்படுத்த அனுமதி கிடையாது.

சிறப்பு பஸ்கள்

ஒலிபெருக்கியில் மாற்று சமுதாயத் தினரை விமர்சித்தோ, தனிநபர்களை குறித்தோ, விமர்சித்தோ, பாடல்கள், ஒலிநாடாக்கள், வசனங்கள், பேச்சுக்கள் ஒலிபரப்பக் கூடாது. விழாவிற்காக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில்பட்டி முதல் கட்டாலங்குளம் கிராமம் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்