தாதகாப்பட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் வீரகுமாரர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி
தாதகாப்பட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் வீரகுமாரர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரடு பொம்மண்ணசெட்டிக்காடு பகுதியில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடித் திருவிழாவையொட்டி அம்மன் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் மகா தீபாராதனை நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு வேண்டுதல் வைத்து விரதம் இருந்தவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றியதற்கும், புதிய வேண்டுதல் வெற்றிகரமாக நடைபெற வேண்டி வீரகுமாரர்கள் கத்தி போட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட வீரகுமாரர்கள் வரிசையாக நின்று, மேள தாளங்கள் இசைக்கு ஏற்றவாறு நடனமாடி, தங்களது உடலில் கத்தி போட்டப்படி ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து அம்மனின் காவல் தெய்வம் (வீரமுட்டி) வேடம் அணிந்தவர்கள் ஊர்வலம் சென்றனர். விழா முடிந்ததும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் தாதகாப்பட்டி, சஞ்சீவிராயன்பேட்டை, லைன்மேடு, அன்னதானப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னதானப்பட்டி போலீசார் செய்திருந்தனர்.