வீரகாளியம்மன் கோவில் திருவிழா
கபிஸ்தலம் அருகே வீரகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது
கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் வடக்கு கிராமத்தில் வீரகாளியம்மன் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 14-ந் தேதி காலை அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் காப்பு கட்டுதல், பந்தல்கால் நடுதல், பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. அதனைத்தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த 22-ந் தேதி பால்குடம், அலகு காவடி எடுத்தல், இசை நிகழ்ச்சி, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. அன்று மாலை சக்தி கரகம், அம்மன் சிலைகள் காவிரி கரைக்கு புறப்படுதல், இரவு காவிரி கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு அம்மன் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 23-ந் தேதி காலை அம்மன் வீதியுலாவும், மாலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து 24-ந் தேதி விடையாற்றி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், விழா குழுவினர், மகளிர் குழுவினர் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடந்தது குறிப்பிடத்தக்கது.