பெயர் பலகை சேதம்: போலீஸ் நிலையம் முன்பு வி.சி.க.வினர் தர்ணா வடபொன்பரப்பியில் பரபரப்பு
வடபொன்பரப்பி போலீஸ் நிலையம் முன்பு வி.சி.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வடபொன்பரப்பி,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புத்திராம்பட்டில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெயர் பலகை சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், வடபொன்பரப்பி போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மாலை போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடந்து வருவதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.