ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் வசந்த உற்சவ விழா
ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் வசந்த உற்சவ விழா நடந்தது.
ஸ்ரீரங்கம்:
வசந்த உற்சவ விழா
பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வசந்த உற்சவ விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான வசந்த உற்சவ விழா நேற்று தொடங்கி வரும் ஜூன் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவின் முதல் நாளான நேற்று சுவாமி, அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மண்டபத்தில் இருந்து புறப்பட்டு தண்ணீரால் சூழப்பட்ட மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு எழுந்தருளினர்.
திருமுறை விண்ணப்பம்
அங்கு சுவாமி, அம்மனுக்கு 16 விதமான தூப தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, திருமுறை விண்ணப்பமும் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து இரவு 8 மணிக்கு சுவாமியும், அம்மனும் புறப்பட்டு உற்சவ மண்டபத்தை சென்றடைந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.