வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், இசட்.ஆலமரத்துப்பட்டி ஊராட்சி, ஆண்டிபட்ட கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுசல்யா முன்னிலை வகித்தார். முகாமை அரவக்குறிச்சி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை, சளி பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, இ.சி.ஜி., ஸ்கேன், கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் கண்டறியும் பாப்ஸ்மியர் பரிசோதனை போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. மகப்பேறு மருத்துவர் கோகிலா, காது மூக்கு தொண்டை நிபுணர் இலக்கியா, தோல் மருத்துவர் பிரீத்தி, பல் மருத்துவர் முருகேஸ்வரி, எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் மயில் வேந்தன், பொது சிறப்பு மருத்துவர் அரவிந்தகுமார், பெண் மருத்துவர் சிவசங்கரி, யுனானி மருத்துவர் இஸ்மாயில் கான், இயன்முறை மருத்துவர்கள் சிவரஞ்சனி, பிரியங்கா போன்ற சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் முகாமில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் இருதய நோய் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 66 நபர்களுக்கு காசநோய் கண்டறிவதற்கு நடமாடும் பரிசோதனை மையம் மூலம் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. ஒரு குழந்தைக்கு தீவிர ரத்தசோகை காரணமாக மேல் பரிந்துரை செய்யப்பட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் கலந்து கொண்டு பரிசோதிக்கப்பட்ட 35 கர்ப்பிணிகளில் 19 பேர் அதிக கவனம் செலுத்த தேவை என கண்டறியப்பட்டது. குடும்ப நலம், டெங்கு காய்ச்சல் தடுப்பு, தொழுநோய், காசநோய், ஊட்டச்சத்து போன்றவை குறித்த கண்காட்சி நடத்தப்பட்டது. இம்முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜா, மேற்பார்வையாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.