மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; கிராம நிர்வாக அலுவலர் சாவு
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் கிராம நிர்வாக அலுவலர் பலியானார்.
திண்டுக்கல்லை அடுத்த புகையிலைப்பட்டியை சேர்ந்தவர் சேசு ஆரோக்கியம் (வயது 42). இவர், சிலுவத்தூர் அருகே உள்ள வங்கமனூத்துவில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவர், திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்துக்கு வேலை தொடர்பாக வந்தார்.
பின்னர் அங்கிருந்து அவர் புகையிலைப்பட்டி செல்வதற்காக மாலப்பட்டி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மாலப்பட்டி, சுப்புராமன் பட்டறை அருகே அவர் வந்தபோது, எதிரே வந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக சேசு ஆரோக்கியம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், சேசு ஆரோக்கியத்தை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சேசு ஆரோக்கியம் உயிரிழந்தார்.இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான சேசு ஆரோக்கியத்துக்கு விக்டோரியா (37) என்ற மனைவியும், ஜாஸ்பர் (9) என்ற மகளும், கிளாட்வின் (6) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.