காட்பாடி வழியாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டது

சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரெயில் நேற்று இயக்கப்பட்டது. அந்த ரெயில் காட்பாடியில் உணவு ஏற்றுவதற்காக நின்று சென்றது.

Update: 2023-04-08 16:52 GMT

வந்தே பாரத் ரெயில்

வந்தே பாரத் ரெயில் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 10 வந்தே பாரத் ரெயில்கள் 17 மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் சென்னை-மைசூரு இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

இந்த வந்தே பாரத் ரெயில் புதன்கிழமை தவிர அனைத்து வார நாட்களிலும் சென்னையிலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.20 மணிக்கு மைசூரை சென்றடைகிறது. இடையில் காட்பாடி மற்றும் பெங்களூரு ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.

காட்பாடியில் நின்றது

இந்த நிலையில் சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை நேற்று பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து வந்தே பாரத் ரெயிலுக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரெயில் வந்தது. இன்த ரயிலை சாரண மாணவர்கள் கொடியசைத்து வரவேற்றனர்.

இந்த ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தில் நின்றது. இதனை பார்த்த பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காட்பாடி ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நிற்காது என்பதால் அதில் ஏறுவதற்கு பயணிகள் யாரும் இல்லை. பின்னர் விசாரித்த போது தான் ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கான உணவை காட்பாடி ரெயில்வே கேண்டீனில் இருந்து ஏற்றுவதற்காக ரெயில் நின்றது தெரியவந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்