நெல்லைக்கு வந்த வந்தே பாரத் ரயில்: ஆர்வத்துடன் பார்த்து சென்ற பயணிகள்

வந்தே பாரத் ரெயில் நெல்லை வந்தடைந்தது. அதனை பொது மக்கள் ஆர்வமுடன் பார்த்துச்சென்றனர்.

Update: 2023-09-21 15:19 GMT

நெல்லை,

இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் நாடு முழுவதும் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டுக்குள் சென்னை -கோவை இடையே ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அடுத்தபடியாக சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை சந்திப்பு வரை வந்தே பாரத் ரெயில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.இதற்காக தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தெற்கு ரெயில்வே வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ரெயில் பெட்டிகளை கொண்டு இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் இருந்து நேற்று காலை 7.40 மணி அளவில் புறப்பட்டது. இந்த ரெயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக நெல்லை சந்திப்பை பிற்பகல் 3.13 மணிக்கு வந்தடைந்தது. அதாவது இந்த ரெயிலுக்கு 7.50 மணி பயண நேரமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நெல்லைக்கு பிற்பகல் 3.30 மணிக்கு பதில், 17 நிமிடங்கள் முன்னதாக அதாவது 3.13 மணிக்கே வந்து சேர்ந்தது.

புதிதாக வந்தே பாரத் ரெயில் நெல்லைக்கு வந்திருப்பதை அறிந்த பொது மக்கள், ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் நிலையத்துக்கு வந்து வந்தே பாரத் ரெயிலை ஆர்வமுடன் பார்த்தனர். மேலும் ரெயில் பெட்டிகளுக்கும் ஏறி அதில் உள்ள வசதிகளை பார்த்து வியந்தனர். ஒருசிலர் இருக்கைகளில் அமர்ந்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஏராளமானோர் பிளாட்பாரத்தில் ரெயில் முன்பும், ரெயில் படிக்கட்டு அருகிலும் நின்று செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்