நெல்லை-சென்னை இடையே 24-ந் தேதி வந்தே பாரத் ரெயில் சேவை

நெல்லை-சென்னை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை 24-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

Update: 2023-09-20 20:43 GMT

சென்னை,

நாட்டின் முதல் வந்தே பாரத் ரெயில் கடந்த 2018-ம் ஆண்டு பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இந்த ரெயிலின் சேவை டெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி தொடங்கியது. தற்போது, வந்தே பாரத் ரெயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரெயில்வேயில் சென்னை-மைசூரு, சென்னை-கோவை, திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

அதிவேக பயணம், குளிர்சாதன வசதி உள்ளிட்ட காரணங்களால் பயணிகள் மத்தியில் வந்தே பாரத் ரெயிலுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

நெல்லை-சென்னை

இந்த நிலையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்து வந்தது.

இதனால் தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதற்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள், வந்தே பாரத் பெட்டிகளை பராமரிக்க தேவையான முற்றிலும் மின்மயமாக்கப்பட்ட பிட்லைன் பணிகள் ஆகியவை துரிதமாக முடிக்கப்பட்டது.

24-ந் தேதி தொடக்கம்

இந்த நிலையில், வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ரெயில் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அன்றைய தினம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தொடக்க விழா நடக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு ரெயில் சேவையை தொடங்கிவைக்கிறார். நெல்லையில் இருந்து காலை 11 முதல் 11.30 மணிக்குள் வந்தே பாரத் ரெயில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் நோக்கி புறப்படும். அன்றைய தினம் நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில் சேவையை மோடி தொடங்கிவைக்கிறார்.

8 பெட்டிகள்

நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று பிற்பகல் 1.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும். அதேபோல, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடையும் வகையில் கால அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, சென்னை-விஜயவாடா, காசர்கோடு-திருவனந்தபுரம் இடையிலும் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் மொத்தம் 8 பெட்டிகளை கொண்டது. இதில் ஒரு பெட்டி வி.ஐ.பி.க்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் 552 பேர் பயணிக்க முடியும். ரெயில் கட்டண விவரம் விரைவில் வெளியிடப்படும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனை ஓட்டம்

நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட உள்ளதை முன்னிட்டு ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரெயில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் இருந்து பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், அன்னனூர் வழியாக ஆவடி வரையில் நேற்று சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது.

அப்போது, ரெயில் 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி பார்க்கப்பட்டது.

அதிகாரி ஆய்வு

இதற்கிடையே நெல்லை ரெயில் நிலையத்தில் விழா ஏற்பாடுகளை மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்